ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலி குறித்து நீதிபதியின் கேள்விக்கு ஈபிஎஸ் தரப்பு பதில் – பரபரப்பான வாதம்….

Must read

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பளர் பதவிக்காலம் 5ஆண்டுகள் இருக்கும்போது, அவர்களின் பதவி எப்படி காலியாகும் என நீதிபதி எழுப்பிய கேள்விக்கு ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார். 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக  பொதுக்குழுவில், அதற்கான  ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால்,  ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் மட்டுமே காலாவாதியாகிவிட்டன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்குகளின் விசாரணை 2வது நாளாக இன்று உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. . நேற்று ஓபிஎஸ் தரப்பு, வைரமுத்து தரப்பு முடிந்த நிலையில், இன்று ஈபிஎஸ் தரப்பில் வாதங்கள் தொடர்கின்றன.

அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது ஏன்? என்றும் பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா?  என்பதை விளக்குமாறு நேற்று நீதிபதி ஜி.ஜெயசந்திரன் கூறியிருந்தார். நிரந்திர அவை தலைவராக கட்சி விதிப்படி தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டாரா? என்றும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு இபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், அதிமுக பொதுக்குழு விதிப்படிதான் கூட்டப்பட்டது. ஜூலை 11-ல் பொதுக்குழு கூட்டப்படும் என ஜூன் 23 பொதுக்குழுவிலேயே அறிவிக்கப்பட்டது. ஜூலை 11 பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27-ஆம் தேதி தயாரிக்கப்பட்டது. ஜூன் 23 பொதுக்குழுவுக்கு நிகழ்ச்சி நிரல் ஏதும் தயாரிக்கப்படவில்லை. ஜூலை 1ல் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தலைமை கழக நிர்வாகிகள் மூலம் அழைப்பு அனுப்பப்பட்டது.  ஜூன் 23 பொதுக்குழு தீர்மானங்கள் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்தவை வரைவு தீர்மானங்கள் தான் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், நீதிபதியின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி குறித்த கேள்விக்கு பதில் அளித்து வாதாடிய த்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடைமுறைகளுக்கு  கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக  பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கவில்லை. ஒப்புதல் அளிக்காததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவாதியாகின. ஆனால், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகள் காலாவாதியாகவில்லை. ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் மட்டுமே காலாவாதியாகிவிட்டன என்று விளக்கினார்.

தொடர்ந்து வாதாடியவர்,  ஒருங்கிணைப்பாளர்களின் இரு பதவிகளும் காலாவதியானதால் அதிமுக நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களுடைய கோரிக்கையை ஏற்று ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்பட்டது.  நீதிமன்ற உத்தரவால் ஒற்றை தலைமை தீர்மானத்தை டிச.2021-ல் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்ற இயலவில்லை. இரட்டை தலைமை தேவையில்லை, ஒற்றை தலைமைதான் தேவை என்பது பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பம். அதிமுக பொதுக்குழுவின் 2432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக கடிதம் அளித்துள்ளனர், அதன்படியே பொதுக்குழு கூட்டப்பட்டது.

ஆனால், மற்ற கட்சிகள் குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது. அதிமுகவில் தான் உள்கட்சி தேர்தல் ஜனநாயகபூர்வமாக நடத்தப்பட்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா வுக்கு பின் கட்சியை வழி நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி கட்சியினர் கடிதம் அளித்துள்ளனர்.

எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கியே செல்கின்றன, ஒருவரின் விருப்பத்தை பார்க்காமல் மொத்த கட்சியின் நலனை பார்க்க வேண்டும். அதிமுக ஜூன் 11 பொதுக்குழு கூட்டத்துக்கு நோட்டீஸ் தரவில்லை என கூற முடியாது. ஜூன் 23-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் பொதுக்குழு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. பொதுக்குழு தொடர்பான அறிவிப்பை நோட்டீசை தபால் மூலம் தர வேண்டும் என்று அவசியம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article