பொள்ளாச்சி
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளார்.
நேற்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தனது உரையில்.
”அ.தி.மு.க. பிரிந்து இருக்கிறது என்று கூறும் முதல்வர் மு.க. ஸ்டாலினே பொள்ளாச்சி கூட்டத்தில் வந்து பாருங்கள். அ.தி.மு.க.வை உடைக்க நினைத்த உங்களின் கனவு தூள்தூளாக உடைக்கப்பட்டது.பொள்ளாச்சியில் நடைபெறுவது தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் அல்ல, வெற்றி விழா கூட்டம் போல் காட்சியளிக்கிறது. அ.தி.மு.க.வை உடைக்க மு.க. ஸ்டாலின் செய்த முயற்சிகள் அனைத்தும் தொண்டர்களால் முறியடிக்கப்பட்டன.
தமிழகத்தை 30 ஆண்டுக்காலம் அ.தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகக் கொண்டு வருவதற்கு அ.தி.மு.க. அரசு பாடுபட்டது.3 ஆண்டுகள் தி.மு.க அரசு செய்த சாதனைகளை பேச தயாரா?. தி.மு.க என்பது கட்சி அல்ல. கார்ப்பரேட் நிறுவனம். குடும்ப அரசியல் நடத்தி வருகின்றனர். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என தி.மு.க வில் வாரிசு அரசியல் நடக்கிறது.
தற்போது மத்தியில் இருந்து அடிக்கடி தமிழகம் வருகிறார்கள், அதனால் என்ன பயன்? மத்தியில் இருந்து வருபவர்கள் தமிழ்நாட்டிற்கு ஏதாவது திட்டங்களைக் கொடுத்தார்களா? ஏதேதோ பேசி மக்களைக் குழப்பி வெற்றி பெற நினைக்கிறார்கள். அது நடக்காது. தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை”
எனத் தெரிவித்தார்.