சென்னை: அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி.  நீக்கப்பட்டது தொடர்பாக பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.

கடந்த 11ந்தேதி (ஜூலை) நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஓபிஎஸ்-ன் அனைத்து கட்சி பொறுப்புகளும் பறிக்கப்பட்டு, அவரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து, அவரது மகனான அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் உள்பட பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையில் கடந்த 17ந்தேதி நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், ஒபிஎஸ்-ன் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியும் பறிக்கப்பட்டு, புதிய துணைத்தலைவராக ஆர்.பி.உதயக்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பாராளுமன்ற அ.தி.மு.க. உறுப்பினர் என்ற அந்தஸ்துடன் இருக்கும் ரவீந்திரநாத் குமாரின் அந்தஸ்தை குறைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். ரவிந்திரநாத் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் தகவலை பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் மூலம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதனுடன், பொதுக்குழு தீர்மானங்கள், ரவிந்தரநாத்  கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் விபரங்களையும்  ஓம்.பிர்லாவுக்கு அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

இபிஎஸ் கடிதம் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டால்,   ரவீந்திரநாத் எம்.பி. எந்த கட்சியையும் சாராத உறுப்பினராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.