டெல்லி : காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக விவாதிக்கலாம் ஆனால் முடிவெடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், இந்த உத்தரவை வழங்கியதுடன், காவிரி ஆணையம் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் ஜூன் 17ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த கூட்டத்தில்,  மேகதாது அணை திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு  தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியதுடன் ஜூன் 7ம் தேதி வழக்கும் தொடர்ந்தது. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை தொடர்ந்து ஜூன் 17, ஜூன் 23, ஜூலை 6 என 3 முறை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகள் மற்றும் அணைகளை பார்வையிட்ட மத்திய நீர்வளத்துறை அதிகாரி மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர், காவிரி ஆணையத்தில் மேகதாது அணை குறித்து விவாதிப்போம் என திமிராக பதில் கூறியிருந்தார். இதற்கு தமிழகஅரசு மற்றும் அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன், முதல்வரும் பிரதமருக்கு கடிதம் எழுதினார். மேலும் இன்று அமைச்சர் துரைமுரகன் டெல்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து பேச இருக்கிறார்.

இந்த நிலையில்,  மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடத்த தடையில்லை. வருகிற 22ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கலாம் ஆனால் முடிவு எடுக்கக்கூடாது என ஆணையத்திற்கு உத்தரவிடுகிறோம்.

2018ம் ஆண்டில் இருந்து மேகதாது பிரச்சனை இருக்கிறது. ஒருவாரம் ஒத்திவைத்தால் ஒன்றும் ஆகாது. மேகதாது பற்றி விவாதிக்கலாமா என்பதை காவிரி ஆணையம்  தெளிவுபடுத்த வேண்டும்.

மேகதாது அணை விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தை அறிய விரும்புகிறோம் என கூறி வழக்கு விசாரணையை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.