ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்காமல் இருக்க உச்சநீதிமன்றம் அதிமுக இரு அணிகளுக்குமான பொதுவான வழிகாட்டு நடைமுறையை தெரிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதியான பிப். 7 ம் தேதிக்குள் இதில் இறுதி முடிவு எடுக்க முடியாது என்பதால் இடைக்கால நடைமுறையை கூறியுள்ளது.
அதில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்., பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகியோரை உள்ளடக்கிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் நபரை பொதுவேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில் அவருக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியிட ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். அணிகள் சார்பில் தனித்தனியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல் இந்த இரண்டு அணிகளுக்குமான பலப்பரீட்சையாக மாறியிருக்கிறது.
இந்த நிலையில் ஈரோட்டில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவைக் கூட்டி பலப்பரீட்சையில் இறங்குவதற்கு பதிலாக மாவட்ட வாரியாக உள்ள பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து தனது தரப்பு வேட்பாளரை ஆதரித்து ஒப்புதல் கடிதம் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஓரிரு நாளில் இந்தப் பணியை முடித்து திங்கட்கிழமை பிப்.6 ம் தேதி இதனை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்து தங்கள் தரப்பு வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை பெற முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
பொதுக்குழு கூட்டம் குறித்து அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனிடம் இருந்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் இ.பி.எஸ். தரப்பில் மாற்று ஏற்பாடு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.