மதுரை மீனாட்சி அம்மனுக்கு ரூ. 11 லட்சம் மதிப்பிலான வைர ஒட்டியாணத்தை சென்னையை சேர்ந்த தொழிலதிபர்கள் கூட்டாக வழங்கியுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் முக்கியமான கோவிலாக மீனாட்சி அம்மன் கோவில் பார்க்கப்படுகிறது. உலக அதிசயங்ககளுக்கான பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், மூலஸ்தானத்தில் மீனாட்சி அம்மனும், அவருக்கு அடுத்தபடியாக சுந்தரேஸ்வரரும் உள்ளனர். தமிழகத்தின் முக்கியமான கோவில்களில் ஒன்றாகவும் பார்க்கப்படும் இக்கோவிலில், மீனாட்சி அம்மனுக்கு ரூ. 11 லட்சம் மதிப்புடைய வைர ஒட்டியாணம் ஒன்றை சென்னையை சேர்ந்த தொழிலதிபர்களான வள்ளியப்பன், நாகப்பன் மற்றும் கணேசனம் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் கூட்டாக வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மதுரை அறநிலையத்துறை பொறுப்பு இணை ஆணையாளர் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையாளரான நடராஜன், “மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்னையை சேர்ந்த வள்ளியப்பன், நாகப்பன் மற்றும் கணேசன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வைர ஒட்டியாணம் உபயமாக வழங்கியுள்ளனர். இந்த வைர ஒட்டியாணம் 180 கிராம் தங்கம், 15 காரட் கொண்ட வைரத்தால் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.11 லட்சத்து 10 ஆயிரம். தினமும் மீனாட்சியம்மனுக்கு வைரகிரீடம், வைரக்கிளி, வைரமூக்குத்தி சாத்தப்பட்டு இருந்த நிலையில் உபயமாக பெறப்பட்ட வைர ஒட்டியாணமும் சாத்துபடி செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.