டில்லி,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இந்தியர்கள்தான், அவர்களின் பாதுகாப்புக்கு மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மேவார் பல்கலைக் கழகத்தில் படித்துவந்த ஜம்மு-காஷ்மீர் மாணவர்கள் 6 பேர், நேற்று முன்தினம் உள்ளூர் வாசிகளுடன் நடந்த கைகலப்பில் பலத்தக் காயமடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

இந்நிலையில் டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீரிகளும் இந்திய குடிமக்கள்தான். காஷ்மீர் மாணவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவோர் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

காஷ்மீரிகள் பாதுகாப்பைக் கருதி மத்திய அரசு, 24 மணி நேரமும் செயல்படும் ஹெல்ப் லைன் எண்ணை வெளியிட்டுள்ளது.

இதனிடையே உத்தரபிரதேசத்திலிருக்கும் நவ்நிர்மாண் சேனா என்ற இந்து அடிப்படைவாத அமைப்பு, வரும் 30 ம் தேதிக்குள் காஷ்மீரிகள் அம்மாநிலத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளது.