தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அளிக்கப்பட்டது தலித் என்பதற்காகத்தான் என்கிற கோணத்தில் “தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்” ஆங்கில நாளடு கட்டுரை வெளியிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வருட பத்ம விபூஷன் விருது இசையமைப்பாளர் இளையராஜா, பாடகர் குலாம் முஸ்தஃபா கான் மற்றும் இந்துத்வா அபிமானி பரமேஸ்வரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“பத்ம விருதுகள் வழங்குவதில் எப்போதுமே அரசியல் நோக்கம் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த வருடம் வழங்கப்பட்டுள்ள விருதுகளில் அரசியல் நோக்கம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும் நாட்டின் உயரிய விருதுகளில் இரண்டாவதாக உள்ள பத்ம விபூஷன் விருது வழங்குதலில் அரசியல் நோக்கம் தெளிவாக தெரிவதாகக் கூறி உள்ளனர்.
”தற்போது குஜராத் பாஜக அரசுக்கு எதிராக ஜிக்னேஷ் மேவானி போர்க்கொடி உயர்த்தி இருப்பதால் தலித் வகுப்பை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு உயரிய விருது அளிப்பதன் மூலம் அரசு தலித்துகளுக்கு அங்கீகாரம் அளிப்பதாக காட்டிக் கொள்கிறது. மேலும் சிறுபான்மையினரை திருப்திப் படுத்த குலாம் முஸ்தஃபா கான், மற்றும் இந்துத்வாவினரை திருப்திப் படுத்த பரமேஸ்வரன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது” என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்” என்று அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது சமூகவலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
“இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைத்திறன் உலகறிந்தது. திரைப்பாடல்களில் பல புரட்சிகள் செய்ததோடு நத்திங் பட் விண்ட் உட்பட பல ஆல்பங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்தவர் இளையராஜா. அவரை தலித் என்ற அடையாளத்துக்குள் அடைப்பது கண்டிக்கத்தக்கது” என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டுவருகிறார்கள்.