மான்செஸ்டர்: விண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை தற்போதைக்கு சமன் செய்துள்ளது இங்கிலாந்து அணி.
பொதுவாக, டிரா ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆட்டத்தை சிறப்பாக வென்று காட்டியுள்ளது இங்கிலாந்து அணி.
இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் 469 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய விண்டீஸ் அணி, தனது முதல் இன்னிங்ஸில் 287 ரன்கள் மட்டுமே அடித்து 182 ரன்கள் பின்தங்கியது.
பின்னர், தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து அணியில், பென் ஸ்டோக்ஸ் துவக்க வீரராக களமிறங்கி, 57 பந்துகளுக்கு 78 ரன்களை விளாசினார். 3 விக்கெட்டுகளுக்கு 129 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டத்தை டிக்ளேர் செய்து, இறுதி நாளில், விண்டீஸ் அணிக்கு 312 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.
பொறுமையாக ஆடி, ஆட்டத்தை விண்டீஸ் அணி டிரா செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 198 ரன்களுக்கெல்லாம் ஆட்டமிழந்து தோற்றுப்போனது விண்டீஸ் அணி.
அந்த அணியின் ப்ரூக்ஸ் 62 ரன்களும், ப்ளாக்வுட் 55 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 35 ரன்களும் எடுத்தனர். பிராத்வெய்ட் 12 ரன்கள் தவிர, மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்கமே.
இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட், கிறிஸ் வோக்ஸ், டாம் பெஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.