கட்டாக்:

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் யுவராஜ் சிங் சதம் அடித்து அசத்தினார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வெற்றி பெற்றது. இந்த தொடரில் 1:0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா&இங்கிலாந்து இடையிலான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பரபாதி விளையாட்டு மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி இந்திய அணி பேட்டிங் செய்ய தொடங்கியது.

இந்திய வீரர்கள் ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். 5 ரன்கள் எடுத்த நிலையில் லோகேஷ் ஆட்டமிழந்தார். 11 ரன்கள் எடுத்த நிலையில் தவான் அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய கேப்டன் ஹோக்லி 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின் யுவராஜ் சிங், தோனி ஜோடி இணைந்து பொறுப்புடன் ஆடினர். தோனி அரை சதம் அடித்தார். இதைத் தொடர்ந்து யுவராஜ் ஒரு நாள் போட்டியில் தனது 14வது சதத்தை பூர்த்தி செய்தார்.

98 பந்துகளில் 15 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் சதத்தைப் பூர்த்தி செய்தார் யுவ்ராஜ் சிங். 2011 உலகக்கோப்பைக்குப் பிறகு யுவ்ராஜ் இப்போதுதான் சதம் எடுத்துள்ளார்.

 

சதம் எடுத்த பிறகு யுவ்ராஜ் மேலும் அதிரடியாக விளையாடினார். இதனால் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருந்தது. 126 பந்துகளில் 150 ரன்களை எட்டினார் யுவ்ராஜ். இது அவருடைய அதிகபட்ச ஒருநாள் ரன்களாகும். யுவ்ராஜுக்கு நல்ல இணையாக விளங்கிய தோனி, 106 பந்துகளில் சதத்தை எட்டினார். இது தோனியின் 10-வது ஒருநாள் சதமாகும்.

யுவ்ராஜ் சிங், 150 ரன்களில் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி 10 ஓவர்களில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் பந்துவீச்சை விளாசினார்கள். ஜாதவ் 10 பந்துகளில் 22 ரன்கள், பாண்டியா 9 பந்துகளில் 19 ரன்கள், ஜடேஜா 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார்கள்.

தோனி 122 பந்துகளில் 10 பவுண்டரிகள், ஆறு சிக்ஸர்களுடன் 134 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 381 ரன்கள் குவித்தது. இங்கிலாந்தின் வோக்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 366 ரன்கள் எடுத்து தோல்விஅடைந்தது. இதில் இங்கிலாந்து வீரர் மார்கன் சதம் அடித்தார். பிளங்கட் 102 ரன் எடுத்து அதிரடி ஆட்டம் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அஸ்வின் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதன் மூலம் 2:0 என்ற கணக்கில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா கைப்பற்றியது.