லண்டன்: வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது இங்கிலாந்து அணி.

பாகிஸ்தானுடன் நடந்த ஆட்டத்தில் மிரட்டியதோடு, போதும் என்று நினைத்து ஒதுங்கிக்கொண்டதோ தெரியவில்லை வெஸ்ட் இண்டீஸ் அணி.

ஆஸ்திரேலிய அணியுடன் நடந்தப் போட்டியில், பெளலிங்கில் தொடக்க நிலையில் அதிரடி காட்டியதோடு அவ்வளவுதான். மற்றபடி, ‍நேற்று இங்கிலாந்துடன் நடந்த ஆட்டத்தில் பெயருக்கு ஆடுவதைப் போலவே ஆடினார்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியினர்.

இத்தொடரில் பெரியளவில் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெயில், ஏதோ அணியில் தானும் இருக்கிறேன் என்பதைப் போலவே ஆடி வருகிறார். முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிகோலஸ் பூரண் மட்டுமே அரைசதம் அடித்தார். ரஸ்ஸல் தன் பங்கிற்கு 21 ரன்களோடு திருப்தியடைந்து கொண்டார்.

வெறும் 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 44.4 ஓவர்களிலேயே ஓய்வெடுத்துக்கொண்டது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இங்கிலாந்து தரப்பில் மார்க்வுட் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் நன்றாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை எடுத்தனர். சதமடித்த ஜோ ரூட் தன் பங்கிற்கு 2 விக்கெட்டுகளை காலி செய்தார்.

பின்னர் ஆடத்தொடங்கிய இங்கிலாந்து, மிகவும் அசால்ட்டாக, எந்தப் பதட்டமும் இன்றி இலக்கை நோக்கி முன்னேறியது. ஜோ ரூட் சதமடித்தார். பின்னர் பேர்ஸ்டோ மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

நேரத்தைப் போக்க வேண்டுமென்ற நோக்கில் ஆடாமல், சட்டுபுட்டென்று கதையை முடித்து நடையைக் கட்டும் நோக்கில் ஆடிய இங்கிலாந்து, 33 ஓவரிலேயே வேலையை முடித்தது.