சென்னை: மாதம் ரூ.14,500 உதவித் தொகையுடன் பொறியியல் படிக்க மாணவர்களுக்கு  அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

‘டிப்ளமா முடித்த மாணவர்கள் மாதம்தோறும் ரூ.14,500 உதவித்தொகையுடன் பி.இ படிக்க அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

தனியார் நிறுவனமான காஞ்சிபுரம் எச்எல் மண்டோ ஆனந்த் நிறுவனத்தின் உதவியுடன் வழங்கப்படும் இலவச பொறியியல் படிப்பிற்கு ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கும்படி வேண்டுகோள் விடுத்துளளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் உறுப்பு பொறியியல் கல்லூரியில் எச்எல் மண்டோ ஆனந்த் இந்தியா நிறுவனத்தின் முழு உதவியுடன் பி.இ எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங், பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் தொழில்பயிற்சியுடன் கூடிய பொறியியல் படிப்புகள் வழங்கப்படுன்றன.

இந்த 4 ஆண்டு கால படிப்புகளுக்கான அடிப்படை கல்வித்தகுதி பொறியியல் டிப்ளமா ஆகும்.

பி.இ எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படிப்பில் சேர பாலிடெக்னிக்கில் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இ.சி.இ, எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்களும்,

பிஇ, மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பில் சேர பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல், புரொடக்சன், ஆட்டோமொபைல், உலோகவியல், மரைன் இன்ஜினீயரிங் உள்ளிட்ட பாடங்களை படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

டிப்ளமா படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமா படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு படிக்கும்போதே தொழில்பயிற்சியுடன் மாதம்தோறும் ரூ.14,500 உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும், கல்விக்கட்டணம், உணவு, போக்குவரத்து , மருத்துவ காப்பீடு ஆகிய அனைத்து செலவினங்களையும் எச்எல் மண்டோ ஆனந்த் இந்தியா நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படிப்பில் 2026-27 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

[youtube-feed feed=1]