சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கத்தின்கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு வரும் 21ந்தேதி தொடங்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார். மேலும் நடப்பாண்டு மேலும் 2 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படுவதாகம் அறிவித்தார்.

தமிழ்நாட்டின் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் இயங்கும் உறுப்பு கல்லுரிகள் என மொத்தம் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு , பொறியியல் சம்பந்தப்பட்ட இளநிலை, முதுநிலைப் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.  இளநிலை பொறியியலில் மட்டும் சுமார் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. இவை  அனைத்துக்கும் ஒரே வகையான விண்ணப்ப படிவம், ஒரே வகையிலான இணையவழிக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

அதன்படி, இந்த ஆண்டு (2023)  பி.இ./ பி.டெக். / பி.ஆர்க்.‌ பட்டப் படிப்பில் சேர  விண்ணப்ப பதிவு  மே 5ஆம் தேதி  தொடங்கியது.   சுமார் 2.24 லட்சம் (2,24,073) மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 1,80,301 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். 1,49,737 மாணவர்கள் கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களைப் பதிவேற்றி உள்ளனர்.  விண்ணப்பிக்கும் கால அவகாசம்  ஜுன் 4ந்தேதியுடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து,  சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஜூன் 9 கடைசித் தேதி  என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில்,  ஜூன் 6ஆம் தேதி சம வாய்ப்பு (ரேண்டம்) எண் ஒதுக்கீடு செய்யப்ட்டது. அதைத்தொடர்ந்து, டிஎஃப்சி மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. பின்னர், பொறியியல் தரவரிசைப் பட்டியல் ஜூன் 26ஆம் தேதி வெளியானது.

இதையடுத்து பொறியியல் கலந்தாய்வு எப்போது என கேள்வி எழுந்தது. இந்த நிலையில், இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொறியியல் கலந்தாய்வுக்கான தேதிகளை  கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் அறிவித்தார். அதன்படி, பொறியியல் கலந்தாய்வு வரும் 22ந்தேதி தொடங்குகிறது.

முதல்கட்டகமாக 22ந்தேதி முதல் 26ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டதுடன், இவ்வாண்டில் புதிதாக 2 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன என அமைச்சர் பொன்முடி கூறினார்.

• தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22ம் தேதி தொடங்குகிறது;

• ஜூலை 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை சிறப்பு பிரிவு கலந்தாய்வு;

• ஜூலை 28ம் தேதியில் இருந்து 3 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற இருக்கிறது;

• 28ம் தேதியிலிருந்து தொடங்கி ஆகஸ்ட் 9 வரை முதல் சுற்று கலந்தாய்வு;

• ஆகஸ்ட் 9ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 28ம் தேதி வரை 2ம் சுற்று கலந்தாய்வு!

இந்த ஆண்டு பொறியியல் படிப்பில், அரசு பள்ளி மாணவர்கள் 11,804 பேருக்கு, 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது;  அதன்படி,  சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 236 பேர் அதிகமாக உள்ளனர்.

“செப்டம்பர் 15ம் தேதிக்குள் இந்த 3 கலந்தாய்வு சுற்றுகள் முடிந்த பிறகு காலியிடங்கள் இருக்கும் பட்சத்தில் சிறப்பு கலந்தாய்வு நடைபெறும் என கூறிய அமைச்சர்,  பொறியியல் படிப்புகளில் காலியிடங்கள் இல்லாமல் அனைத்து இடங்களையும் நிரப்புவதற்கான வழிமுறைகளை கையாள, முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும், வழக்கமாக 4 சுற்றுகளாக நடத்தப்படும் கலந்தாய்வு, இந்த ஆண்டு 3 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது என்றவர், ஒவ்வொரு கட்ட கலந்தாய்விற்கும் மாணவர்களுக்கு 12 நாட்கள் வரை அவகாசம் கொடுக்கப்படுகிறது என்றார்.

ஒரு கல்லூரியில் சேர்ந்த பிறகு மாணவர்கள், வேற ஏதேனும் கல்லூரிக்குச் செல்ல விரும்பினால் அவர்கள் செலுத்திய கட்டணத்தைத் திருப்பிக் கொடுக்க வலியுறுத்தி உள்ளோம்; என்றும், ஜூலை 30ம் தேதி வரை கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டு, ஜூலை 31 அன்று கலந்தாய்வு மற்றும் மற்றும் மாணவர்கள் சேர்க்கை குறித்த முழு விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 1ம் தேதிக்கு முன்பே முடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.