சென்னை: சென்னையில் இன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மார்ச் 9ந்தேதி 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தியாகராய நகர் பசுல்லா சாலையில் உள்ள சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ். இவர் தேசிய நெடுஞ்சாலையில் பெயிண்ட் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவரது நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த 9ந்தேதி அரசு ஒப்பந்ததாரர், பார் உரிமையாளர், கட்டுமான நிறுவன அதிபர் வீடு என சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது, சென்னை வேப்பேரியில் போலீஸ் நிலையம் அருகே உள்ள பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவரும், கட்டுமான தொழில் மற்றும் நிதி நிறுவன தொழிலில் ஈடுபட்டு வரும் தொழில் அதிபர் மகாவீர் இரானி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேசன் கடைகளுக்கு வழங்கப்படும் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்யும் அரசு ஒப்பந்த அதிகாரி செல்வராஜ் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. மேலும், தேனாம்பேட்டையில் அரசியல் கட்சி பிரமுகர், தொழில் அதிபர் ஒருவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று மீண்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பணப்பரிமாற்ற புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.