சென்னை: எதிர்கட்சிகளை பழிவாங்க சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மூலம் வழக்கு பதிவு செய்கிறது என மத்திய பாஜக அரசை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக சாடினார். 95% அமலாக்கத்துறை சோதனை எதிர்க்கட்சிகளை சார்ந்ததாகவே இருந்திருக்கிறது என்றும் விமர்சனம் செய்தார்.
தமிழ்நாட்டில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு அமைப்பு என பல மத்தியஅரசின் அமைப்புகள் அவ்வப்போது சோதனைகளை நடத்தி வருகிறது. ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனையில் பல அமைச்சர்கள் சிக்கிய உள்ள நிலையில், தற்போது அமைச்சர் எ.வ.வேலு வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 4 நாட்களாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் jமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது முகநூல் பக்கத்தில், 2014 முதல் 2022 ஆம் ஆண்டு வரை மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை நடத்திய மொத்த சோதனைகளில் 95 சதவிகிதம் எதிர்கட்சித் தலைவர்களை சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. இதை எதிர்த்து இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 14 கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் இத்தகைய நிறுவனங்களின் பழிவாங்கும் போக்கை தடுத்து நிறுத்த வழக்கு தொடுத்துள்ளன. அந்தளவிற்கு அமலாக்கத்துறை எதிர்கட்சிகளை பழிவாங்க சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்து சிறையில் அடைப்பது, மனஉளைச்சலை ஏற்படுத்துவது, அரசியல் ரீதியாக அவர்களை செயல்பட விடாமல் முடக்குவதுதான் பா.ஜ.க.வின் நோக்கமாக இருக்கிறது. இதுவரை அமலாக்கத்துறை கடந்த 9 ஆண்டுகளில் பதிவு செய்த 1569 வழக்குகளில் 9 வழக்குகளில் தான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய குறைவான தண்டனைகளுக்கு காரணம் எதிர்கட்சிகள் மீது ஆதாரமில்லாமல் பழிவாங்குவதற்காகவே வழக்குகள் போடப்பட்டதனால் தான் பெரும்பாலான வழக்குகள் நிரூபிக்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என பதிவிட்டுள்ளார்.