சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அப்பம்மா சமுத்திரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் இருவருக்கும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற அமலாக்கத்துறை முடிவெடுத்துள்ளது.

கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் இருவருக்கும் சொந்தமான விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி காட்டெருமை உயிரிழந்ததை அடுத்து இவர்கள் மீது 2017ம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து விவசாயிகள் இருவரையும் விடுதலை செய்து செஷன்ஸ் நீதிமன்றம் 2021ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழு வழக்கு பதிவு செய்யப்பட்ட இருவரையும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு தங்கள் அசல் சொத்துப்பத்திரங்களுடன் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை திடீரென நோட்டீஸ் அனுப்பியது.

இதனால் கலக்கமுற்ற விவசாயிகள் இதுதொடர்பாக வழக்கறிஞரிடம் ஆலோசித்தனர். இதனையடுத்து விவசாயிகளுடன் அமலாக்கத்துறை அதிகாரியை தொடர்பு கொண்ட வழக்கறிஞரிடம் இதுதொடர்பாக போதுமான விளக்கம் அளிக்கப்படாததை அடுத்து சொத்து பத்திரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுத்தனர்.

தவிர, விவசாயிகளுக்கு அனுப்பிய நோட்டீசில் அவர்களது பெயருக்கு பின்னால் விலாசத்துடன் ஜாதி பெயரை குறிப்பிட்டது குறித்தும் கேள்வி எழுப்பினர்.

பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஏழை விவசாயிகளின் ஜாதி பெயரை குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பிய தகவல் வெளியான நிலையில் அது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் களமிறங்கின.

2021ம் ஆண்டு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய ஒரு வழக்கை எந்த ஒரு மேல்முறையீடும் இன்றி அமலாக்கத்துறை எந்த அடிப்படையில் தன்னிச்சையாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது என்றும் இதன் பின்னணியில் உள்ள கருப்பு ஆடு யார் என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தும் நோக்கத்துடன் அதன் பக்கத்து நிலத்துக்கு சொந்தக்காரரான சேலம் மாவட்ட பாஜக செயலாளர் ஜெகநாதன் செயல்பட்டு வந்ததாகவும். இதனால் பல ஆண்டுகளாக அந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை நீடித்து வந்ததாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக விளக்கமளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சேலம் மாவட்ட செயலாளருக்கும் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அனுப்பிய நோட்டீஸை திரும்பப்பெற அமலாக்கத்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆத்தூர் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்… வனவிலங்கை வேட்டையாடியதாக விசாரிக்க அழைக்கப்பட்டனரா ?