டெல்லி: பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
மோடி அரசு பணமதிப்பிழப்பு கொண்டு வந்ததைத் தொடர்ந்து பெரும் தொழில் அதிபர்களின் வீடுகள், நிறுவனங்களில் சோதனை நடத்தியது. அதுபோல கடந்த 2016ஆம் ஆண்டு தொழிலதிபர் சேகர் ரெட்டி, அவரது உறவினர், அவரது ஆடிட்டர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சேகர் ரெட்டி வீட்டிலிருந்து புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் முப்பத்தி ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன . இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விசாரணையில் அவர் வங்கி அதிகாரிகளின் உதவியுடன் பழைய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து, புதிய 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. ஆனால், இந்த வழக்கில் மேலும் எந்தவொரு ஆதாரங்களும் சிக்காத நிலையில், சிபிஐ வழக்கை முடித்துக்கொண்டது.
இந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்ய வேண்டும் சேகர் ரெட்டி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் பலக்கட்ட விசாரணையைத்தொடர்ந்து, இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று சேகர் ரெட்டிக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. சேகர்ரெட்டி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.