சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது. ஆனாலும் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் கடந்த 4-ம் தேதி துவங்கியது. சென்னை, வேலூர், கடலூர் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் முதல் 13 நாட்களும், கடைசி 9 நாட்களும் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்த கத்திரி வெயில் காலம் இன்றுடன் முடிகிறது.
download (7)
இடையில் கோடைமழை காரணமாக சில நாட்கள் மட்டும் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மற்றபடி வெயில் கொடுமை அதிகமாகவே இருந்தது.  சென்னையில் அதிகபட்சமாக கடந்த 26-ந் தேதி 106.16 டிகிரி வெயில் பதிவானது.
கத்திரி வெயில் இன்று விடை பெற்றாலும், வெயிலின் தாக்கம் வரும் 3 நாட்கள் கூடுதலாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 5 செ.மீட்டர் மழையும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 3 செ.மீட்டர் மழையும், திருப்புவனத்தில் 2 செ.மீட்டர் மழையும், ஈரோடு மாவட்டத்தில் 1 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது.