சீலிடப்பட்ட கவர்கள் நீதிக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறியுள்ளார்.

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) தொடர்பாக இந்திய முன்னாள் ராணுவத்தினர் இயக்கம் (IESM) தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது.

ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான பாதுகாப்பு அமைச்சகத்தின் முடிவை இந்திய அட்டர்னி ஜெனரல் சீலிட்ட கவரில் அளித்ததை அடுத்து அதனை தலைமை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.

அட்டர்னி ஜெனரல் அதனை நீதிமன்றத்தில் படித்துக் காட்டவேண்டும் அல்லது அதனை திரும்பப் பெறவேண்டும் என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

“நாங்கள் எந்த ரகசிய ஆவணங்களையும், சீல் வைக்கப்பட்ட கவர்களையும் ஏற்க மாட்டோம், இதுபோன்ற நடவடிக்கையை நாங்கள் வெறுக்கிறோம். நீதிமன்றத்தில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். உத்தரவுகளை அமல்படுத்துவதில் இங்கு என்ன ரகசியம் இருக்க முடியும்?”

“சீல் செய்யப்பட்ட கவரை சமர்ப்பிக்கும் வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாக” அவர் மேலும் கூறினார்.

“உச்ச நீதிமன்றம் அதைப் பின்பற்றினால், உயர் நீதிமன்றங்களும் இதைப் பின்பற்றும்” என்று அவர் அட்டர்னி ஜெனரலிடம் கூறினார்.

சீலிடப்பட்ட கவர்கள், நீதிக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது என்று தலைமை நீதிபதி கூறினார்.

2019 ம் ஆண்டு முதல் 2022 ம் ஆண்டு வரை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதிய நிலுவை தொகை வழங்குவது தொடர்பான இந்த விசாரணையில், மார்ச் மாதம் இவர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

சுமார் 28000 கோடி ரூபாய் ஓய்வூதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்குவது அரசுக்கு சாத்தியமில்லை என்ற நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அதனை வரும் 2024 பிப்ரவரி 28 முடிய பல்வேறு பிரிவுகளாக தவணை முறையில் வழங்க முடிவெடுத்திருந்தது.

நிலுவைத் தொகையை மார்ச் மாதம் வழங்குவது சாத்தியமில்லை என்பதை நீதிமன்றம் உணர்ந்த போதும், நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக பாதுகாப்பு அமைச்சகம் தன்னிச்சையாக முடிவெடுத்தது குறித்து கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் இதுகுறித்து நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற தவறியது குறித்து எச்சரிக்கை விடுத்தது.