சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்ட்டில் தனது முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 257 ரன்களை எடுத்துள்ளது.
பாலோஆனை தவிர்ப்பதற்கே இந்திய அணி இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது. ஆனால், கைவசம் இருப்பதோ வெறும் 4 விக்கெட்டுகள் மட்டுமே.
இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் எடுத்த 578 என்ற ரன்களுக்கு எதிராக களமிறங்கிய இந்திய அணியில், ரோகித் ஷர்மா, ஷப்மன் கில், விராத் கோலி மற்றும் அஜின்கியா ரஹானே ஆகியோர் பொறுப்பை உணராமல் ஆடினர்.
ஆனால், புஜாரா – ரிஷப் பன்ட் ஜோடி களத்தில் நின்றபோது நம்பிக்கை அதிகரித்தது. ஆனால், 73 ரன்களில் புஜாரா வெளியேறினார்.
அதேசமயம், ரிஷப் பன்ட்டுடன், வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்ததும், மற்றொரு நம்பிக்கைப் பிறந்தது. ஆனால், அதுவும் அற்பு ஆயுள்தான். 91 ரன்களில் பன்ட் வெளியேறினார்.
தற்போது சுந்தரும், அஸ்வினும் களத்தில் நிற்கின்றனர். இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பிரிஸ்பேன் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், சுந்தரும் ஷர்துலும் சேர்ந்து, 7வது மற்றும் 8வது விக்கெட்டிற்கு ஆடிய இன்னிங்ஸ் மறுக்க முடியாதது. எனவே, அந்த ஆட்டமாவது மீண்டும் திரும்பி இந்திய இன்னிங்ஸிற்கு கை கொடுக்குமா? என்ற கடைசி நம்பிக்கை தொக்கி நிற்கிறது.
இங்கிலாந்து தரப்பில், டாம் பெஸ் 4 விக்கெட்டுகளைப் பறித்தார். ஜோப்ரா ஆர்ச்சருக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தன.