ஜெனிவா: கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை வாட்டி வதைத்து வந்த கொரோனா பெருந்தொற்று  முடிவுக்கு வருவதாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரஸ் அதோனம் தெரிவித்துள்ளார். இது உலக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு இறுதியின் சீனாவின் வுகான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய கொரோனா எனப்படும் கோவிட்19 பெருந்தொற்று, சீனா, இந்தியா, அமெரிக்க உள்பட உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி சொல்லோனா துயரத்தை கொடுத்தது. வல்லரசு நாடுகள் உள்பட அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தையே புரட்டிப்பட்டது. நாளுக்கு நாள் உருமாறிய நிலையில் பரவத்தொடங்கிய பெருந்தொற்றால் பல லட்சம் பேர் உயிரிழந்தனர். இதனால், தொற்று பரவலை தடுக்க உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தன.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறாதவாறு பொதுமுடக்கம், விமானம், ரயில், பேருந்து உள்பட அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.  இதனால் பொதுமக்கள் வேலைகளை இழந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர்.  கொரோனாவின் உக்கிர தாண்டவத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்திய அரசு நிறுவனம் உள்பட தனியார் நிறுவனங்களும் தீவிரமாக களமிறங்கன.

உலக சுகாதார நிறுவனமும், உலக நாடுகளும்,  மருத்துவ நிறுவனங்களும், ஓய்வின்றி ஆய்வுகளை மேற்கொண்டன.  ஏராளமான முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், இறுதியில் தடுப்பூசி ஒன்றே, தொற்று பரவலை தடுக்க முடியும் என கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் அமெரிக்கா உள்பட சில நாடுகளில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது. இந்தியாவில் 2021ம் ஆண்டு ஜனவரி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

இதையடுத்து தொற்று பரவல் படிப்படியாக கட்டுக்குள் வரத்தொடங்கியது.கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக அந்த அளவுக்கு பலி எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இதனால், மருத்துவ நிபுணர்கள், பொதுமக்களிடையே சற்று நிம்மதி பிறந்தது. தொடர்ந்து உலக நாடுகள் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் செலுத்தும் பணிகளை தீவிரமாக்கியதால், தொற்று பரவல் வெகுவாக குறையத்தொடங்கியது.

2022ம் ஆண்டு தொடங்கியது முதல் தொற்று பரவல் சுமார் 60 சதவிகிதம் வரை கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது தொற்று பரவல் மேலும் கட்டுப்படுத்தப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.

இந்த நிலையில்,  உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனம் அளித்த பேட்டியில்,  ”உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் முடியும் தருவாயை நெருங்கி உள்ளது என மகிழ்ச்சிகரமான செய்தியை தெரிவித்துள்ளார்.

மேலும்,  இந்த வாய்ப்பை நாம் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதை செய்ய தவறும் பட்சத்தில் வைரஸ் உருமாற்றங்கள் அடையலாம். இதனால், நிச்சயமற்ற தன்மை அதிகரிக்க வாய்ப்பு  ஏற்படுவதுடன், உயிரிழப்புகளை அதிகரிப்பதற்கான நிலையும் ஏற்பட்டு விடும். எனவே நாம் மிகவும் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறையத்தொடங்கினாலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற தவறினால், பல பாதிப்புகள் கணக்கில் வராமல் செல்லக்கூடும் என்று எச்சரித்துள்ள உலக சுகாதார அமைப்பு, குளிர் காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அதை எதிர்கொள்ள உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்திக்கொள்ளவும் வலியுறுத்தியதுடன்,  தொற்றுநோய் பரவலை  ஒரு மராத்தான் பந்தயத்துடன் ஒப்பிட்டார்.  100% அதிக ஆபத்துள்ள குழுக்களுக்கு தடுப்பூசி போடவும், வைரஸிற்கான பரிசோதனையைத் தொடரவும் அவர் நாடுகளை வலியுறுத்தினார்.

“உலகின் பெரும்பகுதி தொற்றுநோய் பதிலின் அவசர கட்டத்திற்கு அப்பால் நகர்கிறது என்று சொல்வது நியாயமானது” என்று சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய ஆரோக்கியத்தில் மூத்த ஆராய்ச்சி சக டாக்டர் மைக்கேல் ஹெட் கூறினார். மேலும்,  அரசாங்கங்கள் தங்கள் வழக்கமான சுகாதாரம் மற்றும் கண்காணிப்பின் ஒரு பகுதியாக கோவிட்-ஐ எவ்வாறு சிறந்த முறையில் நிர்வகிப்பது என்பதை இப்போது கவனித்து வருகின்றன, என்று தெரிவித்தார்.

தொற்றுநோய் முடிந்துவிடவில்லை, ஆனால் புதிய இருமுனை தடுப்பூசிகள் வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய மாற்றத்தைக் குறிக்கின்றன என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். ஃப்ளூ ஷாட் போன்ற ஒற்றை வருடாந்திர தடுப்பூசி அதிக அளவிலான பாதுகாப்பை வழங்க வேண்டும் மற்றும் நாட்டை இயல்பு நிலைக்குத் திரும்பச் செய்ய வேண்டும் என்று அவர்கள் கணித்துள்ளனர்.