ட்விட்டர் நிறுவனத்தில் ஓர்க் ஃப்ரம் ஹோம் கலாச்சாரத்துக்கு எலன் மஸ்க் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

தினமும் எட்டு மணிநேரம் வீதம் வாரத்துக்கு 40 மணி நேரம் அலுவலகத்துக்கு வந்து வேலை செய்தால் போதும் என்று ஊழியர்களுக்கு அனுப்பிய முதல் ஈ-மெயிலில் குறிப்பிட்டுள்ளார்.

44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய நிறுவனத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வரும் எலன் மஸ்க் ட்விட்டரில் ப்ளூ டிக் வைத்திருப்பவர்களுக்கு 8 டாலர் மாத சந்தா அறிவித்தார்.

இதுகுறித்து தான் அனுப்பிய ஈ-மெயிலில் குறிப்பிட்டுள்ள எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் வருமானத்தில் பாதி சந்தா தொகையில் இருந்து வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அலுவலகத்தை திறந்து வைத்துள்ள ட்விட்டர் நிறுவனம் அலுவலகத்துக்கு வந்து வேலை செய்ய விருப்பமுள்ளவர்கள் வரலாம் என்று கூறியிருந்தது.

ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகத்தை எலன் மஸ்க் ஏற்றுக்கொண்ட பிறகு தனது ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தில் உள்ளது போல் ஊழியர்கள் அலுவலகம் வர உத்தரவிட்டுள்ளார் இதன் மூலம் வெளியில் இருந்து வேலை பார்ப்பது முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.