எலுமியன் கோட்டூர் தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில்
மூலவர் தீண்டாத் திருமேனி; சிவலிங்கத் திருமேனி வெளிர் நிறமுடைய, செம்மண் நிறத்தில் உள்ளது. பெரிய ஆவுடையார்; அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் உள்ளது. பூஜையின்போது கூட அவரை அர்ச்சகர்கள் தொடுவதில்லை.ஒரு சிறு குச்சியின் உதவியுடன் வஸ்திரங்கள் மற்றும் மலர்கள் அணிவிக்கப்படுகின்றன.
குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், அர்ச்சனைகள் செய்து வணங்கினால் தோஷம் நீங்கும்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் எனச் சிறப்புப் பெற்ற இங்கு அம்பாள் தெற்கு நோக்கியபடி, ஸ்ரீசக்கரபீடத்துடன் அருளுகிறாள்.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி யோக தட்சிணாமூர்த்தியாக சின்முத்திரையை இதயத்தில் வைத்துக் காணப்படுகிறார். வலது காலை மடித்து பீடத்தில் வைத்து, இடது கையை ஆசனத்தில் அழுத்திக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டு கல்லால் மரத்தின் கீழ் சனகாதி முனிவர்களோடு, பாதத்தில் முயலகன் அழுந்திக் கிடக்க மிக அமைதியாக அமர்ந்திருக்கின்ற இவரது சிற்பம் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும்.
கோவில் அமைப்பு:
இந்த ஆலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும், அதிகார நந்தி மண்டபம் உள்ளன. இத்தலத்தில் கொடிமரம் இல்லை. வெளிப் பிரகாரத்தில் இடதுபுறம் அரம்பை வழிபட்ட அரம்பேஸ்வரர் 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.
கருவறையில் இறைவன் தெய்வநாதேஸ்வரர் கிழக்கு நோக்கு லிங்க உருவில் காட்சி தருகிறார். ஆலயத்திற்கு ஒரு பிரகாரம் மட்டுமே உள்ளது. பிரகாரம் வலம் வருகையில் குருந்த விநாயகர் சந்நிதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர் சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவை உள்ளன. கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், அவரை அடுத்து தட்சிணாமூர்த்தி, கருவறை பின்புறம் லிங்கோத்பவருக்கு பதில் அவ்விடத்தில் மகாவிஷ்ணு, அடுத்து பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
சிறப்புக்கள் :
பேரின்ப நிலையில் உள்ள இவரை வணங்கினால் காண்போரை வசீகரிக்கும் முகப்பொலிவையும், மனஅழகையும் பெறலாம், குறிப்பாக பெண்கள் வணங்கினால் கூடுதல் அழகைப்பெறுவர் என்பது நம்பிக்கை.
தெய்வநாயகேஸ்வரரை வணங்கிட தோஷங்கள் நீங்கும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் (திருவிற்கோலம்) சிவஸ்தலத்திலிருந்து தென்மேற்கே 4 கி மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. சென்னை – அரக்கோணம் மின்சார ரயில் மார்க்கத்திலுள்ள கடம்பத்தூரில் இறங்கி அங்கிருந்து பேரம்பாக்கம் சென்று பின் இலம்பையங்கோட்டூர் செல்லலாம்.