சென்னை:
ஜூன் 1ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், வரும் 31ந்தேதிக்குள் பள்ளி வாகனங்கள் அனைத்திற்கும் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந் தேதி திறக்கப்படுகிறது. இதன் காரணமாக தனியார் பள்ளிகள் மாணவ மாணவிகளின் வசதிக்காக ஏற்படுத்தியுள்ள பள்ளி வாகனங்கள் ஆண்டுதோறும் தகுதிச்சான்று பெறவேண்டியது கட்டாயம்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் பள்ளிகள் சார்பாக இயக்கப்பட்டு வரும் 628 பள்ளிக்கூட வாகனங்களை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் வெ.அன்புச்செல்வன் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, கொளத்தூரில் உள்ள டி.ஆர்.ஜே.ஆஸ்பத்திரி அருகே 196 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்காக அணிவகுத்து நின்றன. அந்த வாகனங்களை சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், பள்ளிக்கூட வாகனங்கள் அனைத்தும் வருகிற 31-ந் தேதிக்குள் தகுதிச்சான்று பெறவேண்டும். பள்ளி வாகனங்களுக்கு 31-ந் தேதிக்குள் தகுதி சான்று பெறாவிட்டால் அந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எத்தனை மாணவர்களை ஏற்றவேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதன்படி தான் நடக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.