தருமபுரி:
ருமபுரி மாவட்டத்தில் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த குட்டி யானை 15 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே வனப்பகுதியில் இருந்து இன்று அதிகாலை வெளியேறிய குட்டி யானை ஒன்று, அங்கு வனப்பகுதியை ஒட்டியுள்ள ஏலகுண்டூர் கிராமத்தில் இருந்த தண்ணீர் இல்லாத விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.

உணவு தேடி ஊருக்குள் நுழைந்தபோது கிணற்றுக்குள் அந்த யானை விழுந்ததாக தெரிகிறது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது கிணற்றுக்குள் சுமார் 50 அடி ஆழத்தில் யானை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அத்துடன், வனத்துறையினருக்கும் அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் உடன் இணைந்து யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி இளைஞர்களும் யானையை மீட்கும் பணிக்கு உதவி புரிந்தனர். இதனிடையே, யானை விழுந்த செய்தி கேட்டு அப்பகுதியில் பொது மக்கள் கூட்டமும் கூடியது.

மயக்க ஊசி செலுத்தி யானை மயக்கம் அடைந்ததும் கழுத்து மற்றம் கால்களில் கயிறு கட்டி கிரேன் மூலம் மீட்கும் பணிகள் நடைபெற்றன. கிணற்றில் உள்ள குறிகிய இடத்தை தாண்டி 30 அடிக்கு மேலே யானை வந்த போது, திடீரென நழுவி மீண்டும் கிணற்றுக்குள் விழுந்தது. இதையடுத்து, கயிற்றை இறுக்கமாக கட்டி மீண்டும் முயற்சிக்கப்பட்டது.

இந்த நிலையில், 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த குட்டி யானை 15 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. மயக்க ஊசி செலுத்தி கிரேன் உதவியுடன் வனத்துறை, தீயணைப்புத்துறை வீரர்கள் யானையை மீட்டனர். குட்டி யானை மீட்கப்பட்டதும் அப்பகுதி மக்கள் ஆரவாரம் எழுப்பினர். தொடர்ந்து, மருத்துவ சிகிச்சைக்காக யானை கொண்டு செல்லப்பட்டுள்ளது.