சென்னை: வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் தற்போது இல்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஆனால், மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிடவில்லை என்றும், வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்தப்படாது என்று மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகு, இதுவரை 3 முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் 4வது முறையாக மீண்டும் வரும் ஜூலை முதல் மின் கட்டணம் உயரும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. வரும் ஜூலை மாதம் முதல் மூன்று சதவிகிதம் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை வாரியம் தமிழ்நாடு மின் வாரியத்துக்கு பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில், வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் தற்போது இல்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில் , வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும். கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை. எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும், எனவும் முதல் – அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் உயர்கிறது மின் கட்டணம்? கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு ஆணையம் பரிந்துரை