சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும்,  மறுவாக்குப் பதிவு நடைபெறும் புவனகிரி பேரூராட்சி பகுதிகளில் மட்டும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் ஜனவரி 26ந்தேதி அறிவித்தது. அதன்படி  பிப்ரவரி 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்றும், தேர்தலில் பதிவான வாக்குகள்  பிப்ரவரி 22ம் தேதி  தேதி எண்ணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், மறைமுக தேர்தல் மார்ச் 4ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

இதனிடையே, பிப்ரவரி .19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று அதற்கான வாக்கு என்னும் பணிகள் நேற்று முடிவடைந்து,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி 4-ம் வார்டு வாக்குச்சாவடி எண் 4 – AVல் பிப்.24ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மறுவாக்குப் பதிவு நடைபெறும் புவனகிரி பேரூராட்சி பகுதிகள் தவிர மற்ற இடங்களில் பிறப்பிக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.