பாரத ஸ்டேட் வங்கிக்கு தேர்தல் பத்திரங்களின் தரவுகளை முழுமையாக அளிக்க உச்சநீதிமன்றம் இன்று காலக்கெடு நிர்ணயித்தது.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் பல்வேறு தகவல்களை வழங்கிய எஸ்.பி.ஐ. வங்கி தேர்தல் பத்திரம் தொடர்பான முழுமையான தகவல்களை வழங்காமல் இருந்தது குறித்து நீதிமன்றம் வன்மையாகக் கண்டித்தது.

இதுதொடர்பாக அரசு மற்றும் வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் நடவடிக்கையை கண்டித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்ச் 21ம் தேதிக்குள் தேர்தல் பத்திரம் தொடர்பான முழுமையான தகவலை வெளியிடவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாக எஸ்.பி.ஐ. வங்கி உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவித்திருந்தது.

இதனையடுத்து தேர்தல் ஆணையம் இந்த தரவுகளை அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

2019 ஏப்ரல் 12 முதல் 2024, ஜனவரி 11 வரை தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்கள் விவரம் மற்றும் 2019 ஏப்ரல் 12 முதல் 2023, நவம்பர் 13 வரை தேர்தல் பத்திரங்களை பணமாக்கிய கட்சிகளின் விவரங்கள் என இரண்டு கோப்புகளாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தரவுகளின் அடிப்படையில் 2019 ஏப்ரல் 12 முதல் 2023, நவம்பர் 13 வரை பாரதிய ஜனதா கட்சிக்கு 5185.21 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. இதில் மெகா இன்ஜினியரிங் நிறுவனம் 519.31 கோடி ரூபாயும் குயிக் சப்ளை செயின் நிறுவனத்திடம் இருந்து ரூ. 325 கோடியும் வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து 225.65 கோடி ரூபாயும் நன்கொடையாக பெற்றுள்ளது.

ஏப்ரல் 12 2019 முதல் ஏப்ரல் 25 2029 வரை வரவு வைக்கப்பட்ட சுமார் 466.31 கோடி ரூபாய் எந்த பத்திரம் மூலம் பெறப்பட்டது என்பது குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ள கோப்பில் குறிப்பிடப்படவில்லை.

அதேபோல் திமுக-வுக்கு மார்ட்டின் லாட்டரின் பியூச்சர் கேமிங் நிறுவனத்திடம் இருந்து ரூ. 503 கோடியும் மெகா இன்ஜினியரிங் நிறுவனத்திடம் இருந்து 85 கோடி ரூபாயும் நிதியாக கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.