என். சொக்கன்
சிதம்பரம் நடராஜருக்குச் ‘சபாநாயகர்’ என்று ஒரு பெயர் உண்டு.
‘சபா’ என்பதைப் பெரும்பான்மைப் பேச்சுவழக்கில் ‘சபை’ என்கிறோம், வடமொழிச்சொல், ‘கிருஷ்ணகானசபா’ என்பதுபோல் சில இசைக்கூடங்களின் பெயர்களில் இதனை இன்றும் காணலாம்.
‘சபை’ என்ற சொல்லைப்பற்றி ஏற்கெனவே பார்த்தோம், தில்லைச்சபைக்கு நாயகர் நடராஜர், ஆகவே, அவர் சபாநாயகர்.
இதே பெயரைச் ‘சபாபதி’ என்றும் அழைப்பார்கள், ‘சபாபதிக்கு வேறுதெய்வம் சமானமாகுமா’ என்று கோபாலகிருஷ்ணபாரதியார் எழுதிய பிரபலமான பாடலுண்டு.
இவ்வகையில், சட்டமன்றம், பாராளுமன்றம் போன்ற சபைகளின் தலைவர்களையும் ‘சபாநாயகர்’ என்று அழைக்கிறோம். இந்த வடமொழிச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல், ‘அவைத்தலைவர்’.
பல அவைகள் இருக்கின்றனவே, அவர் எந்த அவையின் தலைவர்?
இதைக் குறிக்கும்வகையில் ஒருவரைச் ‘சட்டமன்ற அவைத்தலைவர்’ அல்லது ‘நாடாளுமன்ற அவைத்தலைவர்’ என்று அழைக்கலாம்.
‘சபாநாயகர்’, அதாவது ‘சபாபதி’யை ‘அவைத்தலைவர்’ எனத் தூயதமிழில் அழைப்பதுபோல, ‘ஜனாதிபதி’, அதாவது ‘ஜன அதிபதி’யைக் ‘குடியரசுத்தலைவர்’ என்கிறோம். அவருக்குத் துணைநிற்பவர் ‘துணைக் குடியரசுத்தலைவர்.’
அதைவிட, குடியரசுத் துணைத்தலைவர் என்பதே அதிகப்பொருத்தம் என்று தோன்றுகிறது.
என்ன பெரிய வித்தியாசம்?
‘துணை’ என்கிற முன்னோட்டை எங்கே சேர்க்கிறோம் என்பதைப்பொறுத்து அதன் பொருள் மாறும், இங்கே ‘துணைத்தலைவர்’ என்பதே சரியான ஒட்டல், ‘துணைக் குடியரசுத்தலைவர்’ என்றால், துணைக்குடியரசு என ஒன்று இருப்பதுபோலவும், அதற்கு இவர் தலைவர் என்பதுபோலவும் ஒரு மயக்கம் வரலாம்.
அதேபோல், ‘முன்னாள் சட்டமன்றத்தலைவர்’ என்றால், முன்பு எப்போதோ இருந்த ஒரு சட்டமன்றத்தின் தலைவர் என்ற மயக்கம் வரலாம். அந்தச் சட்டமன்றம் இப்போதும் இருக்கிறது, இவர்தான் அதன் முன்னாள் தலைவர். ஆகவே, ‘சட்டமன்ற முன்னாள் தலைவர்’ என்று எழுதுவதே மிகப் பொருத்தமானது.
(தொடரும்)