தேர்தல் தமிழ்: குற்றச்சாட்டு

Must read

என். சொக்கன்
a
அரசியல் தலைவர்கள் ஒருவர்மீது மற்றவர் குற்றச்சாட்டுகளை வீசுவது சகஜம்.
குற்றச்சாட்டு என்பது, குற்றம்சாட்டுதல் என்ற சொல்லிலிருந்து வருகிறது.  அதாவது, ஒருவர்மீது குற்றம்சொல்லுதல்.
பள்ளிப்பாடத்தில் ‘எடுத்துக்காட்டு’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்போம். ‘உதாரணம்’ என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் அது.
தீவுகளைப்பற்றி ஒரு பாடம் படித்துக்கொண்டிருக்கிறோம், அதனை நன்கு புரிந்துகொள்வதற்காக, ஆஸ்திரேலியா என்ற தீவை எடுத்துக்காட்டுகிறோம். ஆகவே, அது எடுத்துக்காட்டு.
அதுபோல, ஒரு தலைவர் இன்னொரு தலைவர்மீது குற்றம்சாட்டுகிறார். ஆகவே, அது குற்றச்சாட்டு.
குற்றம் புரிகிறது, அதென்ன சாட்டு?
சாட்டுதல் என்றால் சேர்ப்பித்தல் என்று பொருள், ஆகவே குற்றம்சாட்டினார், குற்றம்சாட்டப்பட்டார், குற்றச்சாட்டுக்கு ஆளானார் என்றெல்லாம் சொல்லும்போது, அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது என்ற பொருள் எடுத்துக்கொள்ளலாம்.
இதேபோல், சாடுதல் என்ற சொல்லும் இருக்கிறது. ‘ரமேஷ் குப்பையைத் தெருவில் வீசியபோது, சுரேஷ் அவனைச் சாடினான்’ என்கிறோம்.
‘சாடுதல்’ என்றால், மோதுதல், எதிர்த்தல் என்று பொருள். சாடல் என்றால், அத்தகைய எதிர்ப்புப்பேச்சு.
ஒரே வாக்கியத்தில் சாட்டுதல், சாடுதல் இரண்டையும் கொண்டுவந்து புரிந்துகொள்ளலாம்: ‘பிரதமரின் அறிவிப்பைச் சாடிய எதிர்க்கட்சித்தலைவர், அவர் தொலைநோக்கோடு சிந்திக்கவில்லை என குற்றம்சாட்டினார்.’
யார் என்ன குற்றம் சொன்னாலும் சரி, நம்மீது தவறு இல்லாதவரை நாம் நம்முடைய வேலையைச் செய்யவேண்டும். இந்தக் கருத்தைச் சாடுதல் என்ற சொல்லிலேயே தொடங்கி விளக்கும் ஓர் அழகிய பாடல், ‘நீதிநூல்உரை’யில் உளது, எழுதியவர், வேதநாயகம்பிள்ளை:
சாடுவெம்கோடையைத் தலையில் தாங்கியும்
மாடுஉளோர்க்கு அருநிழல் வழங்கும் ஆல்என
கேடு தம்பால் மிகக் கிளைக்கினும், குணப்
பீடுஉளோர் நன்மையே பிறர்க்குச் செய்வரால்.
ஆலமரத்தின் உச்சியில் சூரியன் கடுமையாக மோதினாலும், அதைத் தாங்கிக்கொண்டு, தனக்குக்கீழே உள்ளவர்களுக்கு நிழல் தருகிறது, அதுபோல, நல்லவர்களுக்குப் பிறர் என்ன தீமை செய்தாலும் சரி, அவர்கள் மற்றவர்களுக்கு நல்லதையே செய்வார்கள்!
(தொடரும்)

More articles

Latest article