பெங்களூரு

ன்னும் ஒரு வாரத்தில் கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக நடந்து வருகிறது.

வரும் 10ஆம் தேதி அன்று கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக‌ நடைபெற உள்ளது.  இத்தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையான தொகுதிகளில் பாஜக – காங்கிரஸ் இடையே நேரடி மோதல் உள்ளது.  இந்த தேர்தல் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாகக் கருதப்படுவதால் பாஜக, காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சிகளின் தலைவர்கள் நாடு முழுவதிலும் இருந்து கர்நாடகாவில் குவிந்துள்ளனர்.

ஆளும் பாஜகவைப் பொருத்தவரை பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் என நூற்றுக்கும் மே ற்பட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குல்பர்கா, சின்சோலி தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  கார்கே, ‘‘எனது மகனைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே பிரதமர் மோடி 3 முறை இங்கு வந்துள்ளார். ஒரு எம்எல்ஏவை பார்த்து பிரதமர் பயப்படுவது வேடிக்கை’’ என்றார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பீதர், ரெய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  அவர்,‘‘பாஜக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் 40 சதவீத ஊழல் நடந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஊழல் ஆட்சி ஒழிக்கப்படும்” என்று  பேசி உள்ளார்.  மேலும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விஜயநகர், இண்டி ஆகிய தொகுதிகளில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

அங்குக் கூட்டம் அலைமோதியதால் உற்சாகமடைந்த பிரியங்கா, கைகளைத் தட்டி ஆரவாரப்படுத்தினார்.  பிரியங்கா, ‘‘ராகுலைப் பார்த்து பிரதமர் பயப்படுகிறார். அதனாலேயே அவரை அடக்க முயல்கிறார்’’ எனப் பேசி உள்ளார். முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.