சென்னை: ஏப்ரல் 2 அல்லது 3ஆவது வாரத்தில் தேர்தல் வரலாம் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் புரட்சி ஏற்படும் என்றும் சென்னையில் பாஜக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னை அமைந்தக்கரையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பாஜக மாநில தேர்தல் அலுவலகத்தை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். முன்னதாக சிறப்பு பூஜைகளுடன் பாஜக கொடியேற்றி வைத்து தேர்தல் அலுவலகத்தை அண்ணாமலை திறந்து வைத்தார். தென் சென்னை, வட சென்னை தொகுதிகளுக்கான தேர்தல் அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டன. தேர்தல் அலுவலகத்தில் 39 தொகுதிகளுக்கும் தனித்தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இணையதள வசதி, கூட்ட அரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி விட்டதால், ‘தமிழகத்தில் பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்’ என்ற விருப்பத்தை, மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். ஆனால், பாஜகவினர் கூட்டணி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் நடைபயணம் மேற்கொண்டு வரும் அண்ணாமலை, ‘தமிழகத்தை பொறுத்த வரை, 2024 லோக்சபா தேர்தல் தி.மு.க., மற்றும் பா.ஜ., இடையில் தான் போட்டியே; எனவே, பா.ஜ., தொண்டர்கள் உடனே தேர்தல் பணிகளை துவக்குங்கள்’ என்று அண்ணாமலை கூறி வரகிறார்.
இதைத்தொடர்ந்து, லோக்சபா தேர்தலுக்கு, தனி அலுவலகத்தை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அய்யாவு மஹாலில் தேர்தல் அலுவலகம் மற்றும் , ‘வார் ரூமும்’ அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முழுவதுமாக நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை இந்த அலுவலகத்தில் தான் பாஜக சம்பந்தப்பட்ட அனைத்து ஆலோசனை கூட்டங்களும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை, என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா வருகின்ற 25-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக பல்லடத்தில் 530 ஏக்கரில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் 5 லட்சம் இருக்கைகள் அமைக்கப்படவுள்ளது எனத் தெரிவித்தார். இதில் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கேள்விக்கு, நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு ஏப்ரல் 2 அல்லது 3வது வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், நாங்கள் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டோம் என்றவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் புரட்சி வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு முழுவதும் தாமரை மலரும் என்றும் சனாதனத்தை இழிவுபடுத்தும் திமுகவுக்கு தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று கூறினார்.
நாடு முழுவதும் இந்த தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.