சென்னை:
நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களிக்கவில்லை; அவருடைய விரலில் மை மட்டும்தான் வைத்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ள நிலையில், தான் வாக்களித்தை மீண்டும் உறுதி செய்யும் வகையில், தனது டிவிட்டர் பக்கத்தில் நகர் ஸ்ரீகாந்த் தான் வாக்களித்த வாக்குச்சாவடி முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் மீண்டும் பகிர்ந்துள்ளார்.
கடந்த 18ந்தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றைய தினம், நடிகர், நடிகைகள் தங்களது வாக்குப்பதிவை உறுதி செய்தது தொடர்பாக மை வைக்கப்பட்ட விரலை காட்டி, பொதுமக்களிடையே வாக்களிக்க வலியுறுத்தினர்.
இந்த நிலையில், வாக்குப்பதிவின்போது, நடிகர் ஸ்ரீகாந்த்தின் பெயர் அவரது வாக்காளர் பட்டியலில் இடம்பெற வில்லை என்று அவரை வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பின்னர், ஆவனங்களை காட்டி, தான் வாக்களித்தாகவும், தான் மற்றும் தனது மனைவியின் கையில் வைக்கப்பட்ட அடையாள மையை காண்பித்திருந்தார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்திலும் படத்தை பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு, நடிகர் ஸ்ரீகாந்த்வாக்களிக்கவில்லை என்றும், விரலில் மை மட்டுமே வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இது சர்ச்சை ஏற்படுத்தியது. ஓட்டளிக்காமல் வெறுமனே மையை மட்டும் வைத்துக் கொண்டு எதற்காக இப்படி புகைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் கொடுத்தார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த நிலையில், தான வாக்களித்தேன் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்து உள்ளார். நான் ஓட்டு போட்டதை அங்கே இருந்த அனைவரும் பார்த்தார்கள். முக்கியமாக பத்திரிகையாளர்கள் அனைவரும் போட்டோகூட எடுத்தார்கள். என்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு, என்னுடைய கைரேகையும் எடுத்துக்கொண்டுதான் அதிகாரிகள் ஓட்டு போட அனுமதித்தார்கள். நான் ஓட்டு போடவில்லை வெறும் மை மட்டும்தான் வைத்துக்கொண்டேன் என்று தேர்தல் அதிகாரி சொல்வது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.
குறிப்பாக, தேர்தல் அதிகாரி கூறியதாக வந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். தேர்தல் அதிகாரி இப்படிச் சொல்லியிருப்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.
தொடர்ந்து பேசியவர், ஓட்டளித்த பின்னர் என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் எங்கிருக்கிறது என்று மொபைல் ஆப் உதவியுடன் தெரிந்து கொண்டதாகவும், அதில், தனது வாக்குச்சாவடி, நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை காட்டியது தெரிய வந்ததாகவும், தனது ஆதார் கார்டு முகவரி வைத்து தற்போது என்னுடைய வாக்குச்சாவடி மாற்றப்பட்டுள்ளது என்றும் கூறினார.
இது பற்றி தெரிந்து கொள்ளும் விதத்தில் தேர்தல் ஆணையம் எந்த முன்னேற்பாடையும் செய்யவில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.