சென்னை:

ட்சிக்கொடி மற்றும் அமைப்புகளின் கொடியை வாகங்களில் கட்டிக்கொள்ள மோட்டார் வாகன சட்டத்தில் இடமில்லை என உயர்நீதி மன்றம் மதுரை கிளையில், தமிழக போக்குவரத்துதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விரைவில், வாகனங்களில் கட்சிக்கொடிகள் கட்டுவதற்கு தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

நாடு முழுவதும்தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யபட்டு வருகிறது. இதற்கான பராமரிப்பு பணிகள் அனைத்தும், தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் சுங்கசாவடிகளை அமைத்து வாகனங்களுக்கு சாலை வரி வசூல் செய்கின்றனர். ஆனால், சாலைகளை ஒழுங்காக பராமரிப்பது கிடையாது.

அதுபோல  இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் விதிகளுக்கு மாறாக எல்இடி விளக்குகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட விளக்குகளை விட அதிக எண்ணிக்கையில் விளக்குகள் பொருத்தப்படுவது போன்ற விஷயங்களில் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இதுதொடர்பான வழக்கின் கடந்த விசாரணையின்போது,  நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு. விசாரணையின்போது, நீதிபதிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் எல்இடி விளக்குகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட விளக்குகளை விட அதிக எண்ணிக்கையில் விளக்குகள் பொருத்தவதற்கு மோட்டார் வாகனச் சட்டப்படி அனுமதி உள்ளதா, அரசியல் கட்சியினர் தங்களது வாகனங்களில் கட்சிக் கொடியை கட்டி கொள்வது, தங்களின் தலைவர்களின் படங்களை வைத்து கொள்வது, தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதி கொள்வது ஆகியவற்றிற்கு மோட்டார் வாகனச் சட்டப்படி அனுமதி உள்ளதா என கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்து துறை முதன்மை செயலர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில்,  அரசியல்வாதிகள் தங்களின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்ள மோட்டார் வாகன சட்டத்தில் இடமில்லை என்றும் வாகனங்களில் தங்களது பதவிகளை பெரிதாக எழுதி கொள்ளவும் அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இவ்வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.