திருப்பதி: தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட 1381 கிலோ தங்கம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு, தற்போது விளக்கமளித்துள்ளது திருமலா திருப்பதி தேவஸ்தானம். இந்த அமைப்புதான், திருப்பதி கோயிலை நிர்வகித்து வருகிறது.

“தேவஸ்தானம் சார்பில், சென்னை பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைக்கப்பட்டிருந்த கோயிலுக்கு சொந்தமான 1381 கிலோ தங்கம், உரிய முதிர்ச்சி காலஅளவு முடிவடைந்ததால், வங்கியால் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டபோதுதான் இது நடந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார் தேவஸ்தான் முதன்மை அதிகாரி அணில்குமார் சிங்கால்.

அவர் கூறியதாவது, “தங்கம் தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் நாங்கள் எந்த ஆவணங்களையும் காட்டவில்லை. அதன் பாதுகாப்பு மற்றும் இடமாற்றம் தொடர்பான எந்தப் பொறுப்பும் எங்களுடையது இல்லை.

அந்த தங்கம் தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் வரை, அதுதொடர்பான அனைத்து முழு பொறுப்பும் பஞ்சாப் நேஷனல் வங்கியை மட்டுமே சேரும்” என்றுள்ளார்.

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில், தேர்தல் கமிஷனால் இந்த தங்கம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, ஆந்திர அரசு சார்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் இதுகுறித்து தேவஸ்தானம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி