லக்னோ:

உ.பி.தேர்தலில் பகுஜன் சமாஜ்வாடி கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. 19 இடங்களில் மட்டுமே அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் முடிவு குறித்து அகட்சியின் தலைவி மாயாவதி கூறுகையில்,‘‘தேர்தல் கமிஷன் உடனடியாக தேர்தல் எண்ணிக்கையை நிறுத்த வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த பட்டனை அமுக்கினாலும் பாஜவுக்கு ஓட்டுக்கள் விழும் வகையில் மோசடி செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

வாக்கு எண்ணிக்கையில் பாஜவுக்கு அமோக ஆதரவு கிடைத்து வந்ததை தொடர்ந்து மாயாவதி பத்திரிக்கையாளர்களிடம் இதை தெரிவித்தார். பிரதமர் நரேந்திரமோடி, பாஜ தலைவர் அமித்ஷா ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்திய மாயாவதி உடனடியாக மறு தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

‘‘நாட்டின் ஜனநாயகத்திற்கு பெரும் கேடு விளைவித்துள்ளது. உ.பி. உத்தரகாண்டில் யாரும் எதிர்பாராத வகையில் முடிவுகள் உள்ளது. இங்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பாஜ தவிர இதர கட்சிகளுக்கு அளித்த வாக்குகளை ஏற்கவில்லை. முஸ்லிம் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் கூட பாஜ வெற்றி பெறுவதை ஏற்க முடியவில்லை.

மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு 20 சதவீத வாக்குகள் உள்ளது. ஒரு முஸ்லிமுக்கு கூட போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. இந்த நிலையில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றிருப்பது ஏற்கும்படியாக இல்லை. ஜனநாயகத்தை கொன்று பெற்றுள்ள இந்த வெற்றியை பாஜ கொண்டாட வேண்டாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து தேர்தல் கமிஷனுக்கு மாயாவதி கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘தேர்தல் முடிவுகள் அறிவிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். புதிதாக வாக்குச் சீட்டு பயன்படுத்தி தேர்தல் நடத்த வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.
இவருக்கு தேர்தல் கமிஷன் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ‘‘குற்றச்சாட்டில் உண்மையில்லை’’ என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.