சென்னை: தமிழகத்தில் 3 ராஜ்யசபா எம்.பி. க்கான இடங்களில் காலியாக உள்ள நிலையில், திமுகவின் கோரிக்கையை ஏற்று, ராஜ்யசபா எம்.பி.க்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது அகில இந்திய தேர்தல் ஆணையம். அதன்படி, தற்போது ஒரு ராஜ்யசபா எம்.பி.க்கான இடத்துக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், காலியாக உள்ள 3 தொகுதிகளையும் கைப்பற்றும் வாய்ப்பு திமுகவுக்கு அமைந்துள்ளது. அதிமுக 3 எம்.பி.க்களை இழந்துள்ளது.
அதிமுக மாநிலங்களவை எம்.பி. முகமது ஜான், மார்ச் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது இடத்துக்கு கொரோனா தொற்று காரணமாக மீண்டும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், அதிமுக எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி ஆகிய இருவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஒரு உறுப்பினர் இரண்டு பதவிகளை வகிக்க முடியாது என்பதால் அவர்கள் தங்களது எம்.பி. பதவிக்களை ராஜினாமா செய்தனர். இதனால் 3 ராஜ்யசபா எம்.பி.க்களின் இடங்கள் காலியானது. இந்த இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதற்கிடையில், திமுக சார்பில், முதலில் மறைந்த அதிமுக எம்.பி. முகமது ஜான், இடத்துக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும், சமீபத்தில் ராஜினாமா செய்த அதிமுக எம்.பி.க்களின் இடங்களுக்கு தனியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் அளிக்கப்பட்டது. இதை தேர்தல் ஆணையம் ஏற்று, தற்போது ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ஆனால், முகமது ஜான் காலமானதால் காலியான இடத்துக்கே இப்போது தேர்தல் அறிவித்து உள்ளது. இந்த 1 இடத்துக்கு மட்டும் செப்டம்பர் 13ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
தமிழக சட்டப் பேரவையில் மொத்தம் 234 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ‘
திமுக கூட்டணியில் திமுக 133 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் 18; விசிக-4; சிபிஐ-2; சிபிஎம்- 2 என ஆளும் கட்சி கூட்டணியில் 159 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
அதிமுக கூட்டணியில், அதிமுக- 66 எம்.எல்.ஏ.க்கள்; பாமக 5; பாஜக 4 என மொத்தம் 75 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
திமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் தேவை. தற்போது தமிழகத்தில் அதிமுகவுக்கு 66 இடங்கள் மட்டுமே உள்ளது. அதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 2 இடங்களை கைப்பற்றும் என் எதிர்பார்ப்பு நிலவியது. போட்டி உறுதியாயானால் எப்படியும் ஒரு இடம் அதிமுகவுக்கு கிடைக்கும் வாய்ப்பு இருந்தது.
ஆனால், தற்போது தனித்தனியாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன்வந்துள்ளதால், இது அதிமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு எம்.பி. காலியிடத்திற்கான இடைத் தேர்தல் என்பதால், எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் பாதி எண்ணிக்கைக்கு (117) ஒன்று கூடுதலாக, அதாவது 118 எம்.எல்.ஏ.க்களின் வாக்கை வேட்பாளர் பெற வேண்டும். அவரே வெற்றி பெறுவார். 3 இடங்களையும் திமுகவே கைப்பற்றும் நிலை உருவாகி உள்ளது.
ராஜ்ய சபா ஒரு இடத்துக்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 31ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை செப்டம்பர் 1ம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 3ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, செப்டம்பர் 13ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெற்ற அதே நாளில் மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தற்போதைய எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையின்படி, திமுகவின் வெற்றி உறுதியாகி உள்ளதால், அ.தி.மு.க. தரப்பில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. இதேபோல் மற்ற இரண்டு இடங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் நடைபெறும் என்பதால் அந்த இடங்களையும் திமுக எளிதாக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், திமுகவில் ராஜ்ய சபா எம்.பி பதவியை கைப்பற்ற பலர் முட்டி மோதி வருவதாக கூறப்படுகிறது.