அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கில் சோபிக்க தவறிய நிலையில், அவரின் சகோதரர் கருணால் பாண்ட்யா அதிரடி காட்டி, அரைசதம் அடித்து இந்தியாவை மீட்டுள்ளார்.
இந்த சகோதரர்கள் இருவருமே, ஐபிஎல் தொடரில், மும்பை அணிக்காக ஆடி வருபவர்கள். இன்றையப் போட்டிக்கான இந்திய அணியில், சகோதரர்கள் இருவருமே இடம் பெற்றனர்.
இந்திய அணி நெருக்கடியில் இருந்தபோது, பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு 6வது இடத்தில் களமிறங்கிய தம்பி ஹர்திக் பாண்ட்யா, 9 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். எனவே, சுமையானது கேஎல் ராகுல் மற்றும் தம்பி கருணால் பாண்ட்யாவின் தோள்களில் விழுந்தது.
இதனையடுத்து, தம்பி போனால் என்ன? அண்ணன் நானிருக்கிறேன் என்ற வகையில் விளாச துவங்கினார் கருணால்.
அவரின் வேகத்தைப் பார்த்தே, ராகுலும் அதிரடிக்குத் திரும்பினார் எனலாம். மொத்தம் 31 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், 2 சிக்ஸர்கள் & 7 பவுண்டரிகளுடன் 58 ரன்களை விளாசிவிட்டார். இந்தவகையில், 27 ரன்களை கூடுதலாக அடித்து, அணியை மீட்டுள்ளார்.