சென்னை

சென்னை வண்டலூர் அருகே பொதுத் தேர்வு குறித்த பயத்தால் ஒரு எட்டாம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துக்கொண்டார்.

சென்னை வண்டலூர் அருகே உள்ள பீர்க்கங்கரணையில் உள்ள லட்சுமி நகரில் கொழுஞ்சி நாதன் என்னும் எலக்டிரிசியன் குடும்பத்துடன் வசித்துவந்தார்.  இவரது மனைவி ஒரு பள்ளி ஆசிரியை ஆவார்.   இவருக்கு இரு மகன்கள் உளன்ர்.  இவர்களில் மூத்த மகன் 10 ஆம் வகுப்பிலும் இளையமகன் அமிர்தீஸ்வரன் 8 ஆம் வகுப்பிலும் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

கடந்த வியாழன் அன்று அமிர்தீஸ்வரன் மாலை 5 மணிக்குப் பள்ளியில் இருந்து வந்துள்ளார்.    அவரது பெற்றோர் ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்த போது வீடு உள்பக்கமாகப் பூட்டி இருப்பதைக் கண்டு கதவைத் தட்டி உள்ளனர்.  கதவைத் தட்டியும் திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றவர்கள் அமிர்தீஸ்வரன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.  அங்கு ஏற்கனவே அவர் மரணம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இதை ஒட்டி கொழுஞ்சி நாதன் காவல்துறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் பீர்க்கங்கரணை காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அமிர்தீஸ்வரன் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து மிகவும் அச்சம் அடைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.   கொழஞ்சிநாதன் தனது மகன்கள் இருவரும் பொதுத் தேர்வு எழுத உள்ளதால் தமது வீட்டில் உள்ள கேபிள் இணைப்பைத் துண்டித்துள்ளதாகவும் ஆயினும் அமிர்தீஸ்வரன் தேர்வு குறித்த பயத்தில் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.  இந்த பயம் காரணமாக அவர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.