கொழும்பு

யானைக் குட்டிகளை கடத்தி விற்பனை செய்ததாக வன அதிகாரி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இலங்கை காடுகளில் சுமார் 7500 யானைகள் வசித்து வருகின்றன. இந்த யானைகள் வயல் மற்றும் வீடுகளை அழிப்பதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. ஒரு சில கிராமங்களில் இந்த யானைகளை கொல்ல மின் வேலி, மின் பொறி ஆகியவைகள் பயன்படுத்தப் படுகின்றன. இதனால் இலங்கை வன அதிகாரிகள் இத்தகைய செயல்களை தடுத்து யானைகளை காப்பதில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 40 யானைக் குட்டிகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இதை ஒட்டி வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக இது குறித்து ஆய்வில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக காவல்துறையினரும் பணியில் இறங்கினார்கள். இந்த விசாரணையில் சுமார் 8 பேர் கொண்ட குழு இந்த யானைக் கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அதையொட்டி 8 பேர் கொண்ட அந்த குழுவினர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் யானைகளை பாதுகாக்க நியமிக்கப் பட்ட வன அதிகாரியும் ஒருவர் ஆவார். உபாலி பதுமஸ்ரீ என பெயர் கொண்ட அந்த அதிகாரி வனத்துறையின் துணை இயக்குனர் பதவி வகித்து வருகிறார். இவர்கள் சுமார் 40 யானை குட்டிகளை திருடி ஒவ்வொரு குட்டியைட்யும் 1.25 லட்சம் டாலருக்கு வெளிநாட்டினருக்கு விற்பனை செய்துள்ளனர்.

இந்த 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 20 வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.