கோவை: ரெய்டு நடைபெற்று வரும்  முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு முன்பு 8அதிமுக எம்எல்ஏக்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ 1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதற்கிடையில், அவர்மீது சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாகவும்,  தனது நெருக்கமானவர்களுக்கு மாநகராட்சி ஒப்பந்தம் அளித்ததன்மூலம் ரூ.811 கோடி ஊழல் செய்துள்ளதாக புகார் பதியப்பட்டு உள்ளது.

அதன்படி,  முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, அமைச்சர் வேலுமனியின் கோவை வீடு உள்பட அவருக்கு சொந்தமான  53 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று காலை முதலே சோதனை செய்து வருகின்றனர். சென்னையில் உள்ள வேலுமணியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதுபோல,  நடைபெற்று வருகிறது, வேலுமணியின் உறவினரான, கோவை வடவள்ளியில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சந்திர சேகர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. அவரது வீட்டில் வரவு, செலவு புத்தகம் ,ஹார்ட் டிஸ்க் உள்பட பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ரெய்டுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் அங்கு வந்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலுமணி வீடு முன்பு ஏராளமான பெண்கள் குவிந்து, திமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர். மேலும், அதிமுக எம்எல்ஏக்களும் ஒருவர்பின் ஒருவராக அங்கு விரைந்து வந்தனர்.  அவர்கள் அனைவரும் வேலுமணி வீடு முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏராளமான அதிமுக தொண்டர்கள் அங்கு திரண்டு வருவதால், காவல்துறையும் குவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.