கெய்ரோ:

லண்டனில் ஏலம் விட இருக்கும் பழமைவாய்ந்த துட்டான்காமுன் சிலை எகிப்திலிருந்து திருடப்பட்டது என அந்நாடு உரிமை கோரியுள்ளது.


கற்கால எகிப்தியர்கள் தங்கள் உடலை மரப்பெட்டிகளாலான கல்லறையில் வைத்து அப்படியே அடக்க செய்வதை வழக்கமாக கொண்டவர்கள்.

இறந்தவர்கள் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கையே உடலைப் பாதுகாப்பதற்கு காரணம்.
இந்நிலையில், லண்டனில் உள்ள கிறிஸ்டி ஏலம் மையத்தில் எகிப்தின்  மன்னரின் மகனான பழமைவாய்ந்த துட்டான்காமுனின் சிலையை ஏலம் விடுவதை நிறுத்த வேண்டும் என கிறிஸ்டி ஏலம் மையம் மற்றும் யுனஸ்கோவை எகிப்து தொன்மை பாதுகாப்புத் துறை அமைச்சரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கிறிஸ்து பிறப்பதற்கு முன் எகிப்தில் வாழ்ந்த இளைய மன்னர் என்று துட்டான்காமுனை கூறுகின்றனர்.
தங்களுக்கு சொந்தமான சிலைதான் அது என்பதற்கான ஆதாரத்தை ஆராயுமாறும் எகிப்து வலியுறுத்தியுள்ளது.

மேலும் லண்டனுக்கான எகிப்து தூதரக அதிகாரிகளும், இங்கிலாந்து வெளியுறவுத்துறை அலுவலத்தை நேரில் தொடர்பு கொண்டு, ஏலத்தை நிறுத்த கோரியுள்ளனர்.

எந்த சூழ்நிலையிலும் எகிப்து பொக்கிஷங்களை யாரும் அலட்சியப் படுத்துவதையோ அல்லது விற்பனை செய்வதையோ அனுமதிக்க மாட்டோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பழமைவாய்ந்த சிலையை எகிப்து உரிமை கொண்டாடுவதால் கிறிஸ்ட்டி ஏலம் மையம் கவலையடைந்துள்ளது.

தொன்மை மாறாத பழமைவாய்ந்த சிலையை அவர்கள் எங்கு தேடினாலும் கிடைக்காது. சிலையை ஏலம் விடுவதற்கான உரிமை பெறுவதற்கான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கையையும் நாங்கள் செய்து விட்டோம் என்று கிறிஸ்டி ஏலம் மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்ட்டி ஏலம் மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்த சிலை கடந்த 1985-ம் ஆண்டு முனிச்சை சேர்ந்த டீலர் ஹெயின்ஜ் ஹெர்ஜிரிடம் வாங்கப்பட்டது.

இந்த சிலை ஏற்கெனவே ஜோஸப் மெஷினா, பிரிஞ்ச் வில்ஹெம் வோன் தம் ஆகியோரிடம் இருந்தது.
ராஜ்ய ஒப்பந்தங்கள், சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் தொன்மைவாய்ந்த பொருட்களுக்கும், வம்சத்துக்கும் மதிப்பு கொடுக்கிறோம்.

இந்த சிலை எகிப்தில் உள்ள தனியாருக்கு சொந்தமானது. இந்த சிலை 4 மில்லியன் டாலருக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கின்றோம்.

புன்னகையை உதிர்க்கும் உதடுகளுடன் கூடிய வாய், பாதாம் வடிவிலான சாய்ந்த கண்கள், கண்களுக்கும் இமைக்கும் இடையேயான ஆழ்ந்த பதற்றம்…இவையெல்லாம் துட்டான்காமுனின் அடையாளங்கள்.

சிலையின் ஒவ்வொரு பகுதியும் வலிமை மற்றும் அமைதியை வெளிப்படுத்துகிறது என கிறிஸ்ட்டி ஏலம் மையம் தெரிவித்துள்ளது.

எனினும், தங்கள் நாட்டிலிருந்து திருடப்பட்ட இந்த சிலையை மீண்டும் திருப்பி கொண்டு வருவதற்கான போராட்டத்தை எகிப்து தொடர்ந்து நடத்தி வருகிறது.
கடந்த 1988-ம் ஆண்டும் இதே போன்று லண்டனில் ஏலம் போக இருந்த, எகிப்திலிருந்து திருடு போன தொன்மைவாய்ந்த பொருட்களை எகிப்து மீட்டெடுத்தது குறிப்பிடத்தக்கது.