விவசாயத்துக்காக மேட்டூர் அணையை திறந்தார் முதல்வர் எடப்பாடி! விவசாயிகள் மகிழ்ச்சி

Must read

மேட்டூர்:

விவசாய பாசனத்திற்கு மேட்டூர் அணையை இன்று காலை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று ( ஆக. 13) காலை மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை கடந்தது. இதன் மூலம் 65-வது முறையாக மேட்டூர் 100 அடியை கடந்து சாதனை படைத்துள்ளது.

தற்போதைய நிலையில், அணைக்கு வினாடிக்கு நீர் வரத்து 2.53 லட்சம் கன அடி யாக உள்ளது .அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதையடுத்து பொதுப்பணிதுறை அதிகாரிகள் காவிரி நீருக்கு பூஜை செய்தனர்.டெல்டா பாசனத்திற்காக இன்று மேட்டூர் அணையை முதல்வர் இபிஎஸ் திறந்து வைத்தார்.  தற்போது 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது மேலும் பத்தாயிரம் கன அடி வரை உயர்த்தப்படும் என முதல்வர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி, மேட்டூர் அணையைத் திறக்க முடியாமல் இருந்தது குறித்து வேதனையில் இருந்தேன்; மழை காலதாமதமாகப் பெய்தாலும் மேட்டூர் அணை நிரம்பி வருகிறது.  இறைவன் அருளால் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும், சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

விவசாயிகளுக்கு தேவையான நீர் இந்த ஆண்டு வழங்கப்படும் என்றவர், இதன் காரணமாக 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மேட்டூர் அணை நீரால் பாசன வசதி பெறும் என்றும் கூறினார்.  கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் 137 நாட்களுக்கு தினமும் தண்ணீர் திறக்கப்படும். 20 மாவட்டங்களில் காவிரி நீர் குடிநீர் ஆதாரமாகத் திகழ்கிறது! கடந்த ஆண்டு பாசனத்திற்கு 212 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது.

மேலும்,  விதை நெல் மற்றும் உரம் போதுமான அளவிற்கு கையிருப்பில் உள்ளது. விவசாயிகள் தண்ணீரை சிக்கன மாகவும், முறை வைத்தும் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தவர்,  வருண பகவான் கருணையால் இந்த ஆண்டு காவிரி டெல்டா விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும். கர்நாடகாவில் 2 முக்கிய அணைகளும் நிரம்பிவிட்டன. எனவே அவர்கள் தண்ணீரை திறந்தே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

காவிரியின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது, மேலும் 3 தடுப்பணைகள் கட்டப்படும், பொதுப்பணித்துறை சொந்தமான 14 ஆயிரம் ஏரிகளும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான 39 ஆயிரம் குளம், குட்டைகள் தூர்வாரப்படும்  என்ற முதல்வர்,  கோதாவரி – காவிரி நதிகள் இணைக்கப்படுவது உறுதி  என்றார்.

மத்திய அரசின் உதவியுடன் டெல்டாவில் உள்ள அனைத்து கால்வாய்களும் கான்கிரீட் கால்வாய்களாக மாற்றப்படும் என்றும்,  சுமார் 500 கோடி ரூபாய் செலவில் இந்த ஆண்டு சுமார் 1800 ஏரிகள் மேம்படுத்தப்பட உள்ளன. எனவே காவிரி நீர் நிச்சயம் நன்கு சேமிக்கப்படும் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

முன்னதாக, இன்று அதிகாலை 4 மணியளவில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவிரி நீரை வரவேற்று வழிபட்டனர்

கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பலத்த மழை பெய்ததால், காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து 35 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 85 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வெள்ள நீர் காவிரியில் பெருகி ஓடுகிறது.

ஒகேனக்கல்லில் நடைபாதையை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டத்தில் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லு மாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article