சென்னை,
எடப்பாடி அணியினரின் டிடிவி தினகரன் குறித்த அறிவிப்பை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீட்டிலும் அவரது அணியினரின் ஆலோசனை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, எடப்பாடி அணியினர் தற்போதுதான் விழித்துள்ளார்கள் என்று கூறினார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றினர். இதையடுத்து டிடிவி.தினகரனுக்கு அதிமுகவில் தொடர்பு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். ஏற்கனவே இரு அணிகளும் இணைவதானால், சசிகலா மற்றும் டிடிவி.தினகரனை வெளியேற்ற வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்த நிலையில், இன்று டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பத பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இன்று ஓபிஎஸ் தலைமமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், கழக வளர்ச்சி பணிகள் மற்றும், தமிழக மக்களுடைய அன்றாடை தேவைகளை அரசுக்சு எப்படி எடுத்து சொல்வது பற்றியும் ஆலோசனை நடைபெற்றதாக கூறினார்.
இதையடுத்து, எடப்பாடி அணியினரின் தீர்மானம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதில் பதில் அளித்த கே.பி.முனுசாமி, ஏற்கனவே நாங்கள் அறிவித்தபடி நடைபெற்று வரும் தர்ம யுத்தத்தில், ஜெ. மரணம் குறித்த விசாரணை, சசிகலா, குடும்பத்தினர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டதால்தான் இரு அணிகளும் இணையும் என்று கூறினார்.
மேலும், டிடிவி தினகரன் ஜெயலலிதாவால் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே கட்சியில் இருநது வெளியேற்றப்பட்ட வர். அவர் கட்சி உறுப்பினர் இல்லை. அவரை துணைப் பொதுச்செயலாளராக அவர்கள் (எடப்பாடி அணி) ஏற்றக்கொண்டார்கள் தற்போது வெளியேற்றுவதாக கூறி உள்ளார்கள்.
இப்போதுதான் அவர்கள் விழித்துள்ளார்கள். தினகரனோடு சசிகலா குடும்பத்தினர் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைத்திருக்கிறோம் என்றார்.
சசிகலா குடும்பத்தினர் எங்களால் ஏற்றக்கொள்ளப்படாத நிலையில், தற்போது அவர்கள் வெளியேற்றி இருக்கிறார்கள் என்றார்.
மேலும் இரு அணியினரும் மறைமுகமாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு,
மறைமுக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அமைச்சர்கள்தான் சொல்கிறார்கள் என்று கூறினார்.
சசிகலாவை கட்சியை விட்டு நீக்கினால் மட்டுமே இரு அணிகள் இணைப்பு சாத்தியம் என ஓ.பன்னீர்செல்வம் அணி செய்தித் தொடர்பாளர் சுவாமிநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.
சசிகலாவால் நியமிக்கப்பட்ட சீனிவாசன், செங்கோட்டையனும் நீக்க வேண்டும் என சுவாமிநாதன் கூறியுள்ளார்.