சென்னை:

பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை ஆதரிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

அதிமுக அம்மா அணியின் இந்த அறிவிப்புக்கு, அதிமுகவின் கூட்டணி கட்சியினர் மட்டுமல்லாது பல்வேறு எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைவதையொட்டி, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கலும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாரதியஜனதா சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு, ஆதரவு கேட்டு பிரதமர் மோடி எடப்பாடி பழனிச்சாமியுடன் பேசினார். அதையடுத்து, நேற்று பாரதியஜனதாவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தருவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

அன்சாரி எதிர்ப்பு

இதற்கு அதிமுகவின்  கூட்டணி கட்சி எம்எல்ஏவான  அன்சாரி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தமிமுன் அன்சாரி. மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரான இவர், அந்த தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஜனாதிபதி தேர்தலில் பிஜேபி வேட்பாளருக்கு முதல்வர் எடப்பாடி அரசு ஆதரவு அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஒருபோதும் நான் பிஜேபி வேட்பாளரை ஆதரிக்க மாட்டேன்.எனது பதவி பறிபோனாலும் அதைபற்றி எனக்கு கவலையில்லை என அன்சாரி தெரிவித்துள்ளார்.

சிபிஐ முத்தரசன்

ஆதரித்து தமிழக முதல்வர் பழனிச்சாமி தனது கையாலாகாத தனத்தை காட்டிவிட்டார் என்று சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் காட்டமாக பேசியுள்ளார்.

ராம்நாத் கோவிந்த் ஆர்.எஸ்.எஸ்சின் வளர்ப்பு. அவர் ஜனாதிபதியாக வருவது நாட்டிற்கே கேடு விளைவிப்பதாகும். அவரைப் போய் தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆதரிப்பது அவரது கையாலாகாதத் தனம்.

மாற்று வேட்பாளர் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி மாற்று வேட்பாளரை நிறுத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை சிபிஐ செய்யும் என்று முத்தரசன் கூறினார்.

திருமாவளவன்

எடப்பாடியின் அறிவிப்புக்கு  கடும் கண்டனங்கள் தமிழக அரசியல் கட்சிகள் எழுப்பியுள்ள நிலையில்,  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பாஜக வேட்பாளரை ஆதரிக்கும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுவிட்டது என்றும் இது கண்டிக்கத் தக்கது என்றும் கூறியுள்ளார்.