சென்னை: எடப்பாடியை தற்குறி, ஊர்ந்து சென்று பதவியை பிடித்தவர் என கடுமையாக விமர்சித்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலைமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மதுரை மாவட்ட காவல்துறை ஆணையரிடம், முன்னாள் திமுக, பாஜக உறுப்பினரும், தற்போதைய அதிமுக பிரமுகருமான டாக்டர் சரவணன் புகார் மனு அளித்துள்ளார்.

அதிமுக பாஜக இடையே கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற வந்த வார்த்தை போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அண்ணாமலையை அதிமுக தலைவர்கள் கடுமையாகவும், ஏளனமாகவும் விமர்சித்து வந்த நிலையில், கடந்த ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமியை இதுவரை இல்லாத அளவுக்கு தற்குறி என கடுமையாக விமர்சனம் செய்தார். இதையடுத்து இரு தரப்பும் இடையே மோதல் உச்சமடைந்துள்ளது. மேலும் இரு தரப்பிலும் போஸ்டர் யுத்தமும் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், அண்ணாமலைமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அதிமுக மருத்துவ அணி மாநிலச் செயலாளர் டாக்டர் சரவணன் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அவரது புகார் மனுவில் , கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கத்தோடு தொடர்ச்சியாக அதிமுகவையும், பொதுச் செயலாளரையும் தரக் குறைவாக பேசி உள்ளார்.
மேலும், முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமியை அவமானப்படுத்தும் நோக்கிலும், பொது அமைதியை சீர் குலைக்கும் வகையிலும் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார்.
அதிமுக குறித்தும், எடப்பாடி பழனிச்சாமி மீதும் அவதூறு பரப்பி வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]