மதுரை:
துரை விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர் ராஜேஸ்வரன் கைது செய்யப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமியுடன் விமானத்தில் பயணித்த ஒருவர், அவரை அவதூறாக பேசியுள்ளார். விமானத்தில் இருந்து இறங்கி பேருந்தில் வந்த போது, துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியுடன் பயணிக்கிறேன். துரோகத்தின் அடையாளம் எடப்பாடி பழனிசாமி, சின்னம்மாவுக்கு துரோகம் செய்தவர். 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி தென் மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்தவர் என்று பேசியுள்ளார். அவர் பேசிக் கொண்டிருந்த போது, எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் அவரின் செல்போனை பிடுங்கியுள்ளார். அதேபோல் அவர் பேசியதை ஃபேஸ்புக்கிலும் லைவ் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

முதல் கட்ட விசாரணையில் சிங்கப்பூரிலிருந்து சென்னை வழியாக மதுரை விமான நிலையத்திற்கு வந்த அவர், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி எம். வையாபுரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரன் என்பது தெரிய வந்துள்ளது. விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணிக்கு வந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.