சென்னை: அதிமுக பொதுக்குழு வரும் 11ந்தேதி நடைபெற உள்ள நிலையில், செங்கோட்டையன் உள்பட அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ்  தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு குழப்பங்களால் மீண்டும் வரும் 11ந்தேதி பொதுக்குழு கூட உள்ளது. இதை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் தங்களது ஆதரவாளர்க ளுடன் தொடர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் தன ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்பட பலருடன் தனது வீட்டில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது, ஓ.பன்னீர்செல்வத்தின் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வது, ஆதரவாளர்களை திரட்டுவது உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக எடப்பாடியுடன்  நேற்று இரவு அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, காமராஜ், விஜய பாஸ்கர், கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.வும் வக்கீலமான இன்பதுரை உள்பட  பல  நிர்வாகிகள்  சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.