புதுச்சேரி: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்மு, இன்று புதுச்சேரி முதல்வர் என்.ஆர்.ரங்கசாமி மற்றும் பாஜக. அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பா.ஜனதா கூட்டணி கட்சிகள் சார்பில், தேசிய ஜனநாயக கட்சி வேட்பாளராக, திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, காங்கிரஸ், திமுக, உள்பட  எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் இரவும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாநில கட்சிகளின் ஆதரவை கோரி வருகின்றனர்.

அதன்படி, திரவுபதி முர்மு இன்று டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வருகை தந்தார். காலை 11.40 மணிக்கு வந்த அவரை  முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், சந்திரபிரியங்கா, பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.

விமான நிலைய நுழைவு வாயிலில் புதுவை மாநில பா.ஜ. க சார்பில் மங்கள இசையுடன் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்கிருந்து கார் மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கார்டு ஓட்டலுக்கு 12 மணிக்கு வந்தார். அங்கு பா.ஜனதா மகளிரணி சார்பில் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஓட்டலில் உள்ள அறைக்கு சென்று சிறிது நேரம் ஒய்வெடுத்தார். பின்னர் ஓட்டலில் தரைதளத்தில் உள்ள அரங்கத்தில் வேட்பாளர் அறிமுகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், என்ஆர்காங்கிரஸ், அதிமுக, பாஜகு எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் முர்மு ஆதரவு கோரினார்.  தொடர்ந்து பா.ஜனதா நிர்வாகிகளை சந்தித்தார். ஜனாதிபதி வேட்பாளர் முர்முவுடன் மத்திய மந்திரிகள் முரளீதரன், எல்.முருகன், பா.ஜனதா தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., நீத்துதாமஸ், சுரத்குமார் முகந்தா, சுபாஷ் சந்திரா ஆகியோரும் பங்கேற்றனர். இதன்பின் அவர் லாஸ்பேட்டை விமான நிலையம் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை சென்றார்.