கரூர்: “திமுக ஆட்சியை விமர்சிப்பதன் மூலமாக சிலர் தங்களை பிரபலப்படுத்திக்கொள்கிறார்கள்.  என்னை எதிர்த்து கருத்து சொல்வதன் மூலமாக பிரபலமடை யலாம் என்று நினைப்பவர்களை பார்த்து நான் வருத்தப்படுகிறேன், அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கரூர் மாவட்டத்தில் ரூ.581.44 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.28.60 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ 500.83 கோடிக்கு 80750 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். கூடியிருந்த பொதுமக்களை சந்தித்து வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ” கரூர் மாவட்டத்தில் ஜவுளி காட்சி அரங்கம், ஜவுளிப்பொருட்கள் பரிசோதனை மையம், அமைக் கப்படும். திருமாநிலையூரில் ரூ.47 கோடியில் நவீன புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

தேர்தல் நேரத்தில் கரூர் மாவட்டத்திற்கென்று கொடுத்த வாக்குறுதிகளில், அனைத்தையும் அல்ல, பலவற்றை இந்த ஓராண்டிலே நிறைவேற்றியிருக்கிறோம். இந்த ஓராண்டு காலத்தில் கரூர் மாவட்டத்திற்கு செய்திருக்கக்கூடிய சாதனைகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு செய்திருக்கக்கூடிய சாதனைகளை பார்க்கும்போது, நான் மன நிறைவை அடைகிறேன். இந்த ஓராண்டு காலம் என்பது எனக்கு மனநிறைவை தருகிறது.

ஒவ்வொருவருக்கும் அவரது மனசாட்சிதான் நீதிபதி என்று கூறுவார்கள். அந்தவகையில் எனது மனசாட்சி அளிக்கக்கூடிய தீர்ப்புதான் இது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அலைஅலையாக வருகின்றனர். அப்படி வருகின்ற மக்களின் முகங்களில் மலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் நான் பார்க்கிறேன். இந்த முகங்களின் மூலமாக திமுக ஆட்சி மக்களை முன்னேற்றுகிற ஆட்சி என்பதை தெளிவாக அறிய முடிகிறது.

அதனால்தான் நான் வீண் விமர்சனங்களுக்கு பதில்சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிப்பதே இல்லை. இப்போது எனக்கு மக்களுக்கு நன்மை செய்வதற்கே நேரம் போதவில்லை. அதனால்தான் அக்கப்போர் மனிதர்களின் அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்ல தயாராக இல்ல, அதற்கு நேரமில்லை. மானத்தைப் பற்றி கவலைப்படும் ஆயிரம் பேருடன்கூட போராடலாம். ஆனால் மானத்தைப் பற்றி கவலைப்படாத ஒரு ஆளோடு நாம் போராடவே முடியாது என்று தந்தை பெரியார் அடிக்கடி கூறுவார். அப்படி மானத்தைப் பற்றி கவலைப்படாத மனிதர்கள் வைக்க்கூடியவர்கள் வைக்கின்ற விமர்சனத்தை நான் மதிக்க விரும்பவில்லை.

நியாயமான கோரிக்கையை யார் வைத்தாலும், அதை நிறைவேற்றித்தர நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைவருடைய கருத்தையும் கேட்டு அதை செயல்படுத்தி தருபவனாகத்தான நான் இருக்கிறேனே தவிர, நான் நினைப்பது மட்டும்தான் நடக்க வேண்டும் என்று நினைப்பவன் அல்ல நான். எனவே மக்களின் கருத்துக்களைப் பெற்று ஊடகங்கள் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

தாங்களும் இருப்பதைக் காட்டிக் கொள்வதற்காக ஏதேதோ செய்பவர்களின் பேட்டிகளுக்கு நான் என்றைக்கும் பதில் சொல்ல தயாராக இல்லை. திமுக ஆட்சியை விமர்சிப்பதன் மூலமாக, என்னை எதிர்த்து கருத்து சொல்வதன் மூலமாக பிரபலமடையலாம் என்று நினைப்பவர்களை பார்த்து நான் வருத்தப்படுகிறேன். நான் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் வீட்டில் விளக்காக இருக்கவும், அவர்கள் வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என்று விரும்புகிறவன்” என்று கூறினார்.